பத்மேவுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்
சந்தேகநபர் “கணம் நீதிவான் அவர்களே! இரு முறை எனக்கு சயனைட் கொடுக்கப் பார்த்தார்கள்.
கம்பஹா பபா, பபி ஆகியோரை படகு மூலம் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு அனுப்பிவைத்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை கெஹேல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு 28-09-2026 அன்று கொழும்பு நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கோரலகமகே மனுதின பத்மசிரி பெரேரா எனும் கெஹேல்பத்தர பத்மே நிகழ்நிலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபர் “கணம் நீதிவான் அவர்களே! இரு முறை எனக்கு சயனைட் கொடுக்கப் பார்த்தார்கள். வெலிசறை சிறைச்சாலையில் முறையான பாதுகாப்பு இல்லை. எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது. ஆகையால் எனக்கு முறையான பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்” என்றார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதிவான் மேற்படி சம்பவம் தொடர்பில் அறிக்கையிடுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்தோடு எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
கம்பஹா பபா மற்றும் பபி ஆகியோரை சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைத்த குற்றச்சாட்டின் பேரில் கெஹேல்பத்தர பத்மேவுக்கு எதிராக மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





