ஐ.நா விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வெய்ட் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை
இந்த மாற்றங்கள் எதிர்வருங்காலங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மாத்திரமன்றி, தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கும் அமலாகும் என்பது கரிசனைக்குரிய விடயமாகும்'
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயத்தில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும் வெளிப்படையான முறையிலும், சகல தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் மூலமுமே மேற்கொள்ளப்படவேண்டும். மாறாக முறையான கலந்துரையாடல்களின்றி செய்யப்படக்கூடிய மாற்றங்கள் நீதித்துறையின் சுயாதீனத்துவத்தையும், அதன்மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் சீர்குலைத்துவிடும் என நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வெய்ட் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளால் நீடிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த 7 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த யோசனை குறித்து நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வெய்ட் கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நீதித்துறை சுதந்திரத்தையும், அதன்மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் என தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோன்று உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குத் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தத்தின் உள்ளடக்கமானது நீதிமன்ற சுயாதீனத்துவம் மற்றும் நியாயமான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கான உரிமை என்பன தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'இந்த முன்மொழிவின் பிரகாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படும். இருப்பினும் இந்த மாற்றங்கள் எதிர்வருங்காலங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மாத்திரமன்றி, தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கும் அமலாகும் என்பது கரிசனைக்குரிய விடயமாகும்' எனவும் ஐ.நா விசேட அறிக்கையாளர் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறைசார் நிபுணத்துவத்தைப் பேணல் மற்றும் கட்டமைப்பு ரீதியான தொடர்ச்சித்தன்மையை உறுதிசெய்தல் ஆகிய காரணங்களுக்காக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதை நியாயப்படுத்தமுடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், இருப்பினும் நிறைவேற்றதிகாரம் மற்றும் சட்டவாக்க அதிகாரம் என்பவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதில் நீதித்துறை கொண்டிருக்கும் வகிபாகத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நீதிபதிகளின் பதவிக்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திருத்தங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான விவாதங்கள், பரந்துபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி சம்பந்தப்பட்ட நீதிபதிகள் இத்திருத்தத்தினால் பயனடைவர் என வெளிப்படையாகக் கண்டறியப்படாத போதிலும், இத்திருத்தத்தின் பிரயோகமானது தற்போது பதவியில் உள்ள உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கச்செய்யும் என்று தெரிவித்துள்ள அவர், 'இத்திருத்தத்தைப் பொறுத்தமட்டில் இடைக்கால ஏற்பாடுகள் எவையும் இல்லாத நிலையில், இத்திருத்தமானது வேறு நோக்கங்களுக்காக நீதித்துறையின் கட்டமைப்பை மாற்றியமைப்பதை இலக்காகக்கொண்டிருக்கிறதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்' எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
'இவ்வாறானதொரு பின்னணியில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயத்தில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும் வெளிப்படையான முறையிலும், சகல தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் மூலமுமே மேற்கொள்ளப்படவேண்டும். மாறாக முறையான கலந்துரையாடல்களின்றி செய்யப்படக்கூடிய இவ்வாறான மாற்றங்கள், நீதித்துறையின் சுயாதீனத்துவத்துக்குத் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும்' என்றும் ஐ.நா விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வெய்ட் எச்சரித்துள்ளார்.





