முன்னாள் ஜனாதிபதிகள் தோல்வியடைந்ததில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சிந்திக்கிறார்கள்: நீதி அமைச்சர்
உலக நாடுகளில் ஜனாதிபதிகள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றதன் பின்னர் அவர்கள் நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.
உலக நாடுகளில் ஜனாதிபதிகள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றதன் பின்னர் அவர்கள் நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.அதற்காகவே அவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன். இலங்கையில் அவ்வாறான நிலை உள்ளதா, முன்னாள் ஜனாதிபதிகள் தமது மகன்களுக்கு அரச வரிப்பணத்தின் ஊடாக மாளிகை கட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள்.தோல்வியடைந்த தினத்தில் இருந்து எவ்வாறு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவது என்று சிந்திக்கிறார்கள். அதற்கான வழிமுறைகளை ஆராய்கிறார்கள்.இவர்கள் நாட்டின் நலனுக்கு என்ன செய்கிறார்கள். ஆகவே மக்களின் வரிப்பணத்தில் இவர்களை தொடர்ந்து பராமரிப்பது நியாயமானதா, ஐந்தரை இலட்ச பெறுமதியான காலணி அணியும் மகன்மார்கள் தமது பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-09-2025அன்று நடைபெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்கு சபைக்கு சமர்ப்பித்ததன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்து சட்டத்தை இரத்துச் செய்யும் பொருட்டு இந்தச் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது. சிரேஷட நீதியரசரான வீரமந்திரி வழங்கியுள்ள ஒரு தீர்ப்பில் ' அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ நிர்வாக அதிகாரத்தை மக்களின் பொறுப்பாளராக பயன்படுத்த வேண்டுமே தவிர உரிமையாளராக செயற்பட கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அந்த அதிகாரம் எச்சந்தர்ப்பத்திலும் மக்களின் பொது நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு இல்லாதவை எமக்கு வேண்டாம் என்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்பட வேண்டும். நாங்களும் இந்த அதிகாரத்தின் தற்காலிக பொறுப்புதாரிகளே.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன வாழ்நாள் முழுதும் மக்களின் வரிப்பணத்தில் சுகபோகமாக வாழ்வதற்காகவே 1986 ஆம் ஆண்டு இந்த சட்டத்தை கொண்டு வந்தார்.ஆகவே இந்த சட்டம் அரசியலமைப்பின் ஒரு பகுதியல்ல. அரசியலமைப்பின் 36 ஆவது பிரிவில் ஓய்வுப்பெற்ற ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவு தீர்மானிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தின் போது இந்த ஓய்வூதிய கொடுப்பனவு பற்றி ஆராயலாம்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் தான் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.மக்கள் இந்த சட்டமூலத்தை எதிர்க்கவில்லை. ஓய்வுப் பெற்றதன் பின்னரும் மக்களின் வரப்பணத்தில் சுகபோகமாக வாழலாம் என்று நினைப்பவர்களுக்கும், அவர்களை தங்கியிருப்பவர்களுக்கும் தான் இந்த சட்டமூலம் எதிரானது. அவர்கள் தான் சட்டமூலத்தை எதிர்க்கிறார்கள். இந்த சட்டத்தை இவர்கள் இதுவரை காலமும் முறைகேடாகவே பயன்படுத்தியுள்ளார்கள்.
தேவையற்ற செலவுகள் இரத்துச் செய்யப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்தோம்.மக்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 2005.08.31 ஆம் திகதியன்று அமைச்சரவை பத்திரம் ஊடாக மாதிவெல பகுதியில் தனக்கு வீடு ஒன்றை நிர்மாணிக்க காணி ஒன்றை ஒதுக்கிக் கொண்டார்.இது சட்டத்துக்கு முரணானது என்று ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்தார்கள். இவ்விடயத்தில் 1986 ஆம் ஆண்டு ஜனாதிபதிகளின் உரித்து சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு நீதிமன்றம் அதற்கு இடமளிக்கவில்லை.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சேவையில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு முன்னர் இந்த சட்டத்தை பயன்படுத்தி மலலசேகர மாவத்தை அரச இல்லத்தை தனக்கு ஒதுக்கிக் கொண்டார்.அத்துடன் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற பிரதம நீதியரசருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டார்.இவரது இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு உயர்நீதிமன்றம் இடமளிக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகள் இந்த சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி தங்களையும்,தம்மை சார்ந்தோரையும் வளப்படுத்திக் கொண்டார்கள்.இதற்கு மக்களின் வரிப்பணமே செலவழிக்கப்படுகிறது.இதனை மாற்றியமைக்க கூடாதா, இந்த சட்டம் தொடர்ந்து அமுலில் இருந்தால் மக்களையும் கொன்று உண்பார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் இவ்வாறான எடுக்க கூடாது.
உலக நாடுகளில் ஜனாதிபதிகள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றதன் பின்னர் அவர்கள் நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். அதற்காகவே அவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன்.அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அவர்கள் செயற்படுவார்கள்.ஆனால் இலங்கையில் அவ்வாறான நிலை உள்ளதா,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் தமது மகன்களுக்கு அரச வரிப்பணத்தின் ஊடாக மாளிகை கட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள்.தோல்வியடைந்த தினத்தில் இருந்து எவ்வாறு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவது என்று சிந்திக்கிறார்கள்.அதற்கான வழிமுறைகளை ஆராய்கிறார்கள்.இவர்கள் நாட்டின் நலனுக்கு என்ன செய்கிறார்கள். ஆகவே மக்களின் வரிப்பணத்தில் இவர்களை தொடர்ந்து பராமரிப்பது நியாயமானதா, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். மகன்மார்கள் விண்ணுக்கு விண்கலம் ஏவுவதற்கு பணம் இருக்குமாயின், 5 இலட்சம் பெறுமதியில் காலணி அணிவார்களாயின் ஏன் தமது பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் மாறுப்பட்ட வகையில் செயற்பட வேண்டும்.சிறந்த தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சி ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.





