சிங்கள, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது: ஜனாதிபதி அநுர
நமக்கு இரண்டு பொறுப்புகள் உள்ளன. ஒன்று நாம் வரலாற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும், மற்றொன்று நமது பிரஜைகளின் நிகழ்காலத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
இராணுவ புலனாய்வு பிரிவினருடன் கலந்துரையாடிய போது ஒரே வங்கிக் கணக்கில் இருந்து முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக குரல் எழுப்ப சிங்கள இனவாத குழுக்களுக்கும் சிங்களவர்களுக்கு எதிராக குரல்கொடுக்க முஸ்லிம் இனவாத குழுக்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் 13-11-2025 அன்று நடைபெற்ற 36 ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைக்கு 36 வருடங்களுக்கு முன்னர் எமது கட்சியை கட்டியெழுப்பிய எமது கட்சிக்கு உயிரூட்டிய, ஆன்மிகத்தை சேர்த்த எமது கட்சிக்கு தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் கற்பித்த ரோஹன விஜேவீர உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சகோதரர்களை நினைவு கூர்வதற்காக இன்று கூடியிருக்கிறோம். நாம் 1989 முதல் கடந்த 36 வருடங்களாக அவர்கள் பற்றி உரையாடியிருக்கிறோம். நினைவு கூர்ந்திருக்கிறோம்.
அதிகாரத்தை கைப்பற்றும் இயக்கமாக அன்று பேசினோம். இன்று அதிகாரத்தை கைப்பற்றிய இயக்கமாக பேசுகிறோம். ஆட்சியை கைப்பற்றுவதற்காக அவர்களின் வழிகாட்டல்களும் அவர்களின் அனுபவங்களும் பெரிதும் காரணமாகியது. அதேபோன்று, இந்த நாட்டை கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களின் வழிகாட்டல்கள் முன்மாதிரியாக இருக்கின்றன. கடந்த அரசாங்கங்களையும் எமது அரசாங்கத்தையும் ஒப்பிட பலர் முயல்கிறார்கள்.
இரண்டையும் எவ்வாறு ஒப்பிட முடியும்?எமது ஆட்சியும் அவர்களின் ஆட்சியும் முற்றிலும் வேறுபட்டவை. நாம் மக்களுடனான தொடர்புகளை பலமாக வளர்த்துள்ளதோடு தரப்படுத்தப்பட்ட ஆட்சியை கட்டியெழுப்பியுள்ளோம். அரசியலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியும் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் இன்று எமக்கு அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் நாட்டுக்கு வெற்றிகளை அடைவதில் அவர்களிடமிருந்து பெற்ற பல விடயங்கள் வழிகாட்டியாக உள்ளன.
எமது ஆட்சியிலுள்ள மாற்றங்கள் என்ன? இதற்கு முன்னர் ஆட்சியை கைப்பற்ற போராடினோம். இன்று இந்த ஆட்சியின் ஊடாக மக்களுக்கும் நாட்டுக்கும் வெற்றிகளை பெற்றுக் கொடுக்க போராடுகிறோம். மாற்றம் எங்கு உள்ளது. அன்றிருந்த நோக்கத்திற்கும் இன்றிருந்த நோக்கத்திற்கும் இடையில் மாத்திரம் தான் மாற்றம் உள்ளது. எமது தோற்றம்,எதிர்பார்ப்புகள்,எமது வாழ்க்கை என்பவற்றில் எந்த மாற்றமும் கிடையாது. எமக்கு அளிக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்பு மாறியுள்ளது.
அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் எமது தனித்தனி முயற்சிகளுக்கு அப்பால் இன்று மேடையில் இருக்கும் நானும் நீங்கள் அனைவரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளோம். எமது நீண்ட வரலாற்றினதும் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மனச்சாட்சி மற்றும் எதிர்பார்ப்புகளின் தொடர்ச்சியாகத் தான் இந்த ஆட்சி மாற்றம் அமைந்துள்ளது. 3,4 வருடத்தில் நடைபெற்ற மாயாஜாலத்தினால் இது நிகழவில்லை.
36 வருடங்களுக்கு முன்னர் ரோஹன விஜேவீர உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சகோதரர்கள் எமக்கு தந்த குணாம்சங்கள் என்ன? எந்த கடினமான நிலையிலும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கைவிடக் கூடாது எனறும் அதற்காக எந்த கடிமான நிபந்தனையின் கீழும் போராட வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துக்காட்டினர்.அதே போன்றே இன்றும் இந்த நாட்டின் வெற்றி மற்றும் மேம்பாட்டுக்காக போராடுவோம். வெற்றி பெறுவோம்.
அதிகாரத்தை பெற்ற பின்னர் பலரின் கவனம் எம்மீது திரும்பியுள்ளது என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் 3 வீதம் 4 வீதம் அல்லது 5 வீதம் அல்லது சிலவேளை 10 வீதம் என்று தான் எம்மைப் பற்றி ஏனையவர்கள் கருதினார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் 3-4 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர் போக்குள்ள தரப்புகள் எல்லா நாடுகளிலும் இருப்பதாக பிரதான தலைவர் ஒருவர் கூறினார். ஒருபோதும் நாம்ஆட்சியை கைப்பற்ற மாட்டோம் என எண்ணினார்கள். அவர்களை பிரமிப்பூட்டும் வகையில் ஆட்சியை பிடித்துள்ளோம். இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாதவாறு எம்மை பற்றி தேடவும் கவனிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.
இந்த அதிகாரம் மக்களை விட உயர்வானதல்ல. இது தலைக்கனம் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. இந்த அதிகாரம் பொது மக்களுக்கானது. ஆட்சியை பிடிப்பதற்கான பயணம் இலகுவானதல்ல. 88,89 ஆம் ஆண்டுகளில் ரோஹன விஜேவீர உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சகோதரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். எமது இயக்கத்தின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள். ஆனால் எமது சகோதரர்கள் வதைமுகாம்களில் வேதனைப்பட்டாலும் தமது முயற்சியை கைவிடாமல் இருந்ததால் 1994 ஆம் ஆண்டின் பின்னர் இந்த இயக்கம் மீள கட்டியெழுப்பப்பட்டது. அவர்கள் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் அவர்கள் இதற்கு வழங்கிய பங்களிப்பை நினைவுகூறுகிறோம்.
இந்தப் பயணம் பல முக்கிய மைல்கற்களை கடந்தது. 2007 இல் கட்சியின் ஒரு குழுவினர் பிரிந்து சென்று எதிரியுடன் இணைந்து எமது அமைப்பிற்கு எதிராக அவதூறு பரப்பினார்கள். ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக உறங்கியவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர். இன்று அவர்களுடைய அவதூறுகளும் அவர்களும் நடைபிணங்களாக மாறியுள்ளன. அவர்களை யாரும் பொருட்படுத்துவதில்லை. அதற்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டு எமது இயக்கத்தை பிளவுபடுத்தி அதிகமானோர் பிரிந்து சென்றனர்.
எமது பயணம் கரைந்து விடும் என்றும் இதைவிட புரட்சிகரமான வேறு பாதை உள்ளது என்று இன்னும் சிலர் பிரிந்து சென்றனர். எதிர் தரப்பினர்களுக்கு கோசங்களை உருவாக்குபவர்களாக அவர்கள் மாறிவருகின்றனர். அது எமக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த விடயம் தொடர்பில் டில்வின் சில்வா உள்ளிட்டோருடன் கலந்துரையாடினோம். அந்த அரசியல் போக்கு தவறானது என்பதால் அதற்கு எதிராக போராட வேண்டும் என டில்வின் சில்வா குறிப்பிட்டார். அச்சந்தர்ப்பத்தில் எமக்கு வழிகாட்டியவர்கள் கூட பிரிந்து சென்றனர்.
39 ஆக இருந்த எம்.பிகள் தொகை 3,4 ஆக குறைந்தது. எமது எதிர்பார்ப்புகளை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று கூறப்பட்டது. 3 வீதம் ஆட்சியை பிடிக்க 1500 வீதம் வரை உயர வேண்டும். ஆட்சியை பிடித்தாலும் செயற்பட தகுதியானவர்கள் கிடையாது என்றும் சர்வதேச தொடர்பு கிடையாது என்றும் பரவலாகப் பேசப்பட்டது. இருந்தும் எம்முடன் பலர் கடைசி வரை எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
2019 இற்குப் பிறகு 2,3 வருடத்தில் ஆட்சியை பெறுவதற்காக நாம் சகல மட்டங்களிலும் ஒரே நோக்கத்துடன் பாடுபட்டோம். எமது நோக்கத்திற்கும் மக்களின் நோக்கத்திற்கும் இடையில் சமநிலை இருந்தது. அதனால் இலங்கை வரலாற்றில் பாரிய மக்கள் ஆணையை பெற்றோம்.
தற்போது நாம் அரசியல் ஸ்தீர நிலையை ஏற்படுத்தியுள்ளோம். எண்ணிக்கையை வைத்து அதிகாரத்தை மதிப்பிட முடியாது. மக்கள் அரசாங்கத்துடன் எந்தளவு பிணைந்துள்ளனர் என்பதிலே அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மை நிலைத்துள்ளது. எமக்கு வாக்களிக்காதோரும் எம்மை அவதானிக்கின்றனர்.
நாம் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார நலன்களை கீழ் மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வை மேலும் மேம்படுத்த வேண்டும். பிரஜைகளின் சமூக அந்தஸ்தை, சமூக பெருமையை உயர்த்த வேண்டும். பொருளாதார நிலை எவ்வாறு இருந்தாலும் அனைவருக்கும் சமூக பெறுமதியை வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில் டொலரின் பெறுமதி ஸ்தீரமற்ற நிலையில் இருந்தது. நாடு நெருக்கடி நிலையில் இருப்பதாக 2021 இல் சர்வதே தர நிறுவனங்கள் அறிவித்தன. டொலரின் பெறுமதி 400 ரூபாவை நெருங்கியது. பண வீக்கம் உயர்ந்தது. வைத்தியர்கள், தொழிற்துறை சார்ந்தோர் நாட்டை விட்டும் சென்றனர். நாட்டிற்கு என்ன நடக்கிறது என கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டி எதிர்வு கூறும் நிலைக்கு ஒரு வருட காலத்தில் நாட்டின் பொருளாதார நிலையையும் அரசியலையும் நாம் உருவாக்கியுள்ளோம்.
எமது ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் . அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 2028 இல் கடனை மீளச் செலுத்த முடியுமா? முடியாதா? என கேள்விகள் உள்ளன. நாம் அதனை மீளச் செலுத்துவோம். சில எதிர்வுகூறல்கள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம். வரவு செலவு திட்ட பற்றாக்குறை தொகை 6.7 வீதம் என மதிப்பிட்டோம். ஆனால் 5.2 வீதமாக அதனை குறைக்க முடிந்தது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக வருமான இலக்கை அடைய முடிந்துள்ளது. எதிர்வரும் வருடங்களில் என்ன நடக்கும் என்பதை எம்மால் எதிர்வுகூற முடியும்.
தற்போது திறைசேரியின் கையிருப்பு உள்ளது. அதனால் நிதிச் சந்தையை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடிந்துள்ளது. திறைசேரி பிணை முறிகளின் வட்டி வீதத்தை ஒற்றை இலக்கத்தில் பேண முடிந்துள்ளது. இதற்கு முன்னர் திறைசேரிக்கு வர முன்னர் அந்த பணத்தை நாசமாக்கினர். சில சமயம் திறைசேரிக்கு வந்த பின்னர் அந்த பணத்தை நாசமாக்கினர். தமக்கு நினைத்தவாறு அந்த பணத்தை வீணடித்தனர். ஆனால் தற்போது அவ்வாறின்றி மக்களுக்கு முடிந்தளவு நிவாரணங்களை வழங்கி வருகிறோம். மேலும் நிவாரணம் வழங்குவோம்.
கிழங்கு மற்றும் வெங்காயம் கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையொன்று அரசின் கீழ் கிடையாது. எனவே நெல் சந்தைப்படுத்தும் சபையைப் போன்ற பலமான பொறிமுறையை உருவாக்க 100 கோடி ரூபா இம்முறை ஒதுக்கியுள்ளோம். 76 வருடங்களாக இதற்கு தீர்வு வழங்கப்படவில்லை. பெரிய வெங்காய அறுவடை இம்முறை அதிகரித்துள்ளதால் பிரச்சினை எழுந்துள்ளது. நாம் நுகர்வோரின் இயல்பு வாழ்வுடனும் பொருளாதாரத்துடனும் தொடர்பு கொள்ளும் பொறிமுறையொன்றை தயாரிப்போம்.
சட்டத்தின் ஆட்சியை நாம் நிலை நாட்டியுள்ளோம். தமது குடும்ப பலம் காரணமாக தம்மை சட்டம் நெருங்க முடியாது என சிலர் நினைத்தார்கள். ஆனால் சட்டம் நெருங்க முடியாத எவரும் நாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். சிலர் சி.ஐ.டி உள்ள வீதியூடாக செல்வதை கூட அவமானமாக நினைத்தார்கள். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு செல்வதை அவமானமாக கருதினார்கள். குற்றப் புலனாய்வுப் பிரிவு அவர்களின் வீடுகளுக்குச் சென்றுதான் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆனால் இன்று அனைவரும் சி.ஐ.டிக்கு வரவேண்டும்.
இந்நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ள கருப்பு இராச்சியமொன்று உள்ளது. அந்த இராச்சியம் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. முக்கிய இடங்களில், அரசியலில் முக்கிய பதவிகளில் இருந்தன. இந்த கருப்பு இராச்சியத்தில் இருந்து நாட்டையும் எமது பிள்ளைகளையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மீட்போம். நாட்டின் தேசிய ஒற்றுமை அழிந்து போன வரலாறு உள்ளது. எங்காவது சமூக பிரச்சினை எழும்போது பள்ளிவாசலை தாக்குவார்கள்.
இராணுவ புலனாய்வு பிரிவினருடன் கலந்துரையாடிய போது ஒரே வங்கிக் கணக்கில் இருந்து முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக குரல் எழுப்ப சிங்கள இனவாத குழுக்களுக்கும் சிங்களவர்களுக்கு எதிராக குரல்கொடுக்க முஸ்லிம் இனவாத குழுக்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது.
தமது இருப்பிற்காக இனவாதத்தை பயன்படுத்தினார்கள். இவ்வாறு செய்து பிரச்சினைகளை மறைத்தார்கள். எமது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு இனவாத மதவாத சம்பவமும் நடைபெறவில்லை. இனவாதத்திற்கு எமது நாட்டில் எந்த இடமும் கிடையாது.
வீழ்ச்சியடைந்த நாட்டை இன்று பலமான தூண்களின் மேல் அடித்தளம் இட்டுள்ளோம். கைத்தொழிலாளர்கள்,வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். பல்வேறு துறைகளுக்கான வாயில்களை திறந்துள்ளோம். இன்னும் பல தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் பலத்துடனும் நிலைத்தலுடனும் நாம் இதனை செய்துவருகிறோம்.
எமக்கு எதிராக சில தோல்வி அடைந்த குழுக்கள் இணைந்து வருகின்றன. நாட்டுப் பற்றுள்ள கெப்பட்டிபொலவும் அதற்கு எதிராக செயல்பட்ட டொன் ஜூவான் தர்மபாலவும் இணைந்துள்ளனர். நாட்டுப் பற்றுள்ளவர்கள் என்றும் தேச துரோகிகள் என்றும் ஒருவரை ஒருவர் விமர்சித்த அனைவரும் இன்று இணைந்துள்ளனர். லசந்தவின் நண்பர்களும் லசந்தவின் கொலையாளிகளும் ஒன்றாக செல்கின்றனர். மத்திய வங்கி திருடர்களும் அதனை விமர்சித்தவர்களும் ஒன்றாக உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள்,முன்னாள் எம்.பிகள் ஒன்றாக திருடியவர்கள், ஒன்றாக மோசடி செய்தவர்கள் இணைந்துள்ளனர். இவர்களுக்கிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. அனைவருக்கும் எதிராக வழக்குகள் உள்ளன. விசாரணைகள் உள்ளன. வரப்பிரசாதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இவை மக்களின் பிரச்சினைகள் அல்ல. அவர்கள் சுயதிருப்திக்காக செயற்படுகிறார்கள். இலங்கை வரலாற்றில் முற்போக்கான மக்கள் நேய அரசாங்கம் ஒன்று உருவாகி உள்ளதால் அதற்கு எதிராக இவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
மக்களின் ஒன்றிணைவுடன் நாம் இந்த வெற்றியை பெற்றோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தான் எமது பிரதான பணியாகும். இருந்தாலும் எதிரானவர்களுக்கு நினைத்தவாறு ஆட இடமளிக்க முடியாது. எமக்கு ஊடகம்,பணம்,அதிகாரம்,குடும்ப பின்னணி எதுவும் இல்லாத நிலையில் மக்களின் எதிர்பார்ப்புடனே ஆட்சியை பெற்றோம். மக்களுடன் தான் எமது பிணைப்பு உள்ளது. எமது முழு அரச செயற்பாடுகளும் மக்களின் பொறுப்கூறலை நிறைவேற்றும் வகையில் உள்ளது. மக்களுக்காக நாம் செயற்படும் போது எதிர்கட்சிகள் அவர்களின் அரசியலை ஊடகங்களில் மாத்திரம் வெளிக்காட்டுகின்றனர்.
கடந்த காலத்தைப் போன்று எதிரணியை முடக்க சிஐடியையோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவையோ நீதிமன்றத்தையோ அரச அதிகாரத்தையோ நாம் பயன்படுத்த மாட்டோம். நாம் கட்டியெழுப்பும் மக்கள் அதிகாரத்தின் ஊடாக இந்த சிறு சிறு முனகல்களை அடக்க வேண்டும். இந்த பிற்போக்கு சக்திக்கு எதிராக பாரிய மக்கள் சக்தியை அடுத்த வருடத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.
அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த இயக்கத்தின் நீண்ட பயணத்தின் வரலாற்று ரீதியான வாரிசுகளாக நாங்கள் மாறிவிட்டோம். அந்த நீண்ட பயணத்தின் தற்போதைய வாரிசுகளாக நாங்கள் மாறிவிட்டோம். இதன் பயனாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். எனவே, அந்த வரலாற்றில் எங்கள் சகோதர சகோதரிகளின் ஆன்மீக எதிர்பார்பை வேறு எவரையும் விட எங்கள் தோள்களில் சுமக்கிறோம்.
நமக்கு இரண்டு பொறுப்புகள் உள்ளன. ஒன்று நாம் வரலாற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும், மற்றொன்று நமது பிரஜைகளின் நிகழ்காலத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
பாரிய அர்ப்பணிப்புகளுடன் தான் எமக்கு இந்த அதிகாரம் கிடைத்தது. ஒரு வருடத்தில் எமக்கு எதிராக சிறு கல்லின் அளவு கூட குறையொன்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எமது சகோதரர்களின் உரைகளில் இருந்து குறைபாடுகளை பிடித்து விமர்சிக்கிறார்கள்.
எமது வெற்றி தனித்தனியாக அன்றி எமது வெற்றி கூட்டுச் செயற்பாட்டிலே தங்கியுள்ளது. நாம் கடினமாக நிபந்தனைகளின் கீழ், பாதகமான அரசியல் அரங்கில் எதிர்பாராத வெற்றிகள் எமது ஒற்றுமையில் தான் தங்கியுள்ளது. ஆட்சியிலும் ஒற்றுமை தான் பிரதானமானது. நாம் ஒன்றாக போராட வேண்டும். அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.





