இலங்கையில் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு பிரிட்டன் ஒத்துழைப்பு
சமூகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களைக் கட்டியெழுப்புவதற்கும், மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை முறியடிப்பதற்கும் ஆதரவு வழங்கிவருகின்றது' என்றும் சீமா மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மதசுதந்திரத்தையும், மாறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்ட சகல சமூகங்களினதும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவற்கு பிரிட்டன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என பிரிட்டன் பாராளுமன்ற செயலாளர் சீமா மல்ஹோத்ரா அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் ருத் ஜோன்ஸால் எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே சீமா மல்ஹோத்ரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் அனைவரும் எவ்வித ஒடுக்குமுறைகளுமின்றி தமது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்குக் கொண்டிருக்கும் உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் மத ரீதியான சகிப்புத்தன்மை என்பவற்றின் அவசியம் குறித்து பிரிட்டன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'கொழும்பிலுள்ள எமது உயர்ஸ்தானிகரகம் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்களுடன் அவ்வப்போது சந்திப்புக்களை நடத்துவதன் மூலம் அவர்களது கரிசனைக் கேட்டறிவதுடன் சமூகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களைக் கட்டியெழுப்புவதற்கும், மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை முறியடிப்பதற்கும் ஆதரவு வழங்கிவருகின்றது' என்றும் சீமா மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்தோ - பசுபிக் விவகாரங்களுக்கான பிரிட்டனின் முன்னாள் அமைச்சர் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது மதசுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரிட்டன் கொண்டிருக்கும் கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் மத நம்பிக்கை சுதந்திரம் சார்ந்து இயங்கிவரும் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துப் பேசியதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும் 'கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் சபாநாயகர், நீதியமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்த இந்தோ - பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படவேண்டியதன் அவசியம் மற்றும் நல்லிணக்கத்தின் ஓரங்கமாக சகலரையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த செயற்முறை பின்பற்றப்படவேண்டியதன் முக்கியத்துவம் என்பன பற்றி அவர்களுடன் கலந்துரையாடினார்' எனவும் பாராளுமன்ற செயலாளர் சீமா மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.





