மலையகத்தில் 52சதவீதமானோர் நீண்டகால ஏழ்மையில் உள்ளனர் : அமைச்சர் உபாலி பன்னிலகே
பிற்பட்ட காலத்தில் 2017 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க திவிநெகும (திருத்தச்) சட்டத்தின் பிரகாரம் திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமாக மாற்றப்பட்டது.

சமூக கட்டமைப்பில் ஏழ்மை ஒழிப்பு மற்றும் சமூக வலுவூட்டலை வினைத்திறனாக்குவதற்காகவே சமுர்த்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறந்த தெரிவுகளின் அடிப்படையில் தான் தற்போது சமுர்த்தி நலன்புரி திட்டம் வழங்கப்படுகிறது. மலையக பகுதியில் 52 சதவீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில் உள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படு மென கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-08-2025அன்று நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
1995 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க திவிநெகும சட்டத்தின் பிரகாரம் திவிநெகும திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. சமுர்த்தி அதிகார சபை, மேல்நாட்டு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஸ்ரீ லங்கா தெற்கு அபிவிருத்தி நெடுஞ்சாலை அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றை ஒன்றிணைத்தே 2013 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டது.
பிற்பட்ட காலத்தில் 2017 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க திவிநெகும (திருத்தச்) சட்டத்தின் பிரகாரம் திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமாக மாற்றப்பட்டது. இன்று சுமார் 40 இலட்சம் பயனாளர்கள் சமுர்த்தி திட்டத்தில் உள்ளார்கள். 250 பில்லியன் ரூபா நிதி இருப்பினை சமுர்த்தி திட்டம் கொண்டுள்ளது.
நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி மற்றும் சொத்து தொடர்பான விபரங்கள் கணக்காய்வு செய்யப்படவில்லை. அரசியலமைப்பின் 154 ஆவது ஏற்பாடு மற்றும் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரகாரம் சமுர்த்தி வங்கிகளின் நிதி விவகாரங்கள் கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி வங்கிகள் முறையாக கணக்காய்வு செய்யப்படாத காரணத்தால் பல சிக்க்ல்கள் ஏற்பட்டன.இதுவரையான காலப்பகுதியில் உள்ளக கணக்காய்வுகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டன.உள்ளக கணக்காய்வுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. ஆகவே நிதி ஒழுக்கத்தை பேணுவதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமூக கட்டமைப்பில் ஏழ்மை ஒழிப்பு மற்றும் சமூக வலுவூட்டலை வினைத்திறனாக்குவதற்காகவே சமுர்த்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.சிறந்த தெரிவுகளின் அடிப்படையில் தான் தற்போது சமுர்த்தி நலன்புரி திட்டம் வழங்கப்படுகிறது. மலையக பகுதியில் 52 சதவீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில் உள்ளார்கள்.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.