உள்ளக விசாரணையை கோரவில்லை: சி.வி.கே.சிவஞானம்
தடயவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு தேவையான ஆதரவு அனுசரணையை அரசாங்கம் வழங்க வேண்டும்.

தங்களது தரப்பு உள்ளக விசாரணையை கோரவில்லை என்றும் போர் குற்றங்கள் தொடர்பாகவும் இனப்படுகொலை தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்தமை தொடர்பில் இதன்போது சி.வி.கே.சிவஞானம் கருத்துரைத்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குற்றச்சாட்டு அபத்தமானது. இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அகழ்வுகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது.
தடயவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு தேவையான ஆதரவு அனுசரணையை அரசாங்கம் வழங்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை என்றும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களை சேர்க்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மாறாக உள்ளக விசாரணை உள்ளிட்ட எவ்வித விசாரணைகள் தொடர்பிலும் தமது கடிதத்தில் சொல்லப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை வேண்டாம் என்றோ உள்ளக விசாரணையில் திருப்திப்படுகிறோம் என்றோ குறித்த கடிதத்தில் கூறவில்லை என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.