இலங்கை சுகாதார சேவைக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டு
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் தரம் மற்றும் பயன்பாடு குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இலங்கையின் இலவச சுகாதார சேவைகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இடையிலான சந்திப்பு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைக் கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப அமைச்சு மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் தரம் மற்றும் பயன்பாடு குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சுகாதாரத் துறையின் மனித வளத்தை வலுப்படுத்தக் கடந்த வருடம் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலில், இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியசாலைக் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனர்த்த காலங்களில் பிரித்தானியா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்த பிரதி அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.





