ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சங்கங்களில் உரையாற்றுவதற்கு நாமலுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இரத்து
ஆக்ஸ்போர்டு யூனியனில் நாமல் ராஜபக்ஷ உரையாற்றவுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இரு புகழ்பெற்ற பல்கலைக்கழக சங்கங்களில் உரையாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அந்நிகழ்வில் பங்குப்பற்றுவதற்காக பிரித்தானியாவுக்கு சென்றுள்ள சந்தர்ப்பத்தில் உரையாற்றுவதற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இரு புகழ்பெற்ற பல்கலைக்கழக சங்கங்களின் தீர்மானத்துக்கு கவலை தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிப்படையான விவாதம் மற்றும் கருத்தாடல்களுக்கு ஒரு தரப்பினரால் விடுக்கப்படும் அழுத்தங்கள் தடையாக அமையும் போது அது ஜனநாயகத்துக்கு சாதகமாக அமையாது என அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பு புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இரு புகழ்பெற்ற பல்கலைக்கழக சங்கங்களில் உரையாற்றுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு தமது கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.பிரித்தானிய தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்ட விசேட அறிக்கையில், நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தியிருந்தன.
இவ்வாறான பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி உட்பட பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை லண்டனுக்கு பயணமானார்கள்.
இந்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 100 வருடம் பழமை வாய்ந்த லண்டன் பௌத்த விகாரைக்கு சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து லண்டனில் உள்ள கிங்ஸ்பெரி விகாரைக்கு சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டதுடன், நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.ஆக்ஸ்போர்டு யூனியனில் நாமல் ராஜபக்ஷ உரையாற்றவுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்களைத் தொடர்ந்து ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கத்தில் உரையாற்றுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது.இது குறித்து ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவர் கேத்தரின் யாங், 'மாணவர்களின் நேரடி மற்றும் வெளிப்படையான கேள்விகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதே எமது நோக்கம். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களால் பாதுகாப்பாகவும் நேரடியாகவும் கேள்விகளை எழுப்ப முடியாது என உணர்கின்றனர். சமமான நிலையில் விவாதம் நடத்த முடியாத சூழலில் இந்த நிகழ்வை நடத்துவது சரியாக இருக்காது, என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ் மாணவர் அமைப்பு, 'தற்போதைய சூழலில் இந்த விடயம் குறித்து ஒரு சமநிலையான மற்றும் திறந்த விவாதத்தை முன்னெடுக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம். எனவே எமது நிலைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்பட்டமை குறித்து கவலை தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பல விடயங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட தரப்பினரால் தோற்றுவிக்கப்பட்ட எதிர்ப்புக்கள் மற்றும் அழுத்தங்களினால் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிச் மாணவர் அமைப்புக்கள் நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உரையை இரத்துச் செய்தமை கவலைக்குரியதொரு விடயமாகும்.இவ்வாறான தொடர்பு மற்றும் வாய்ப்பை இரத்துச் செய்வது ஜனநாயகத்தை பலப்படுத்தாது
பல்கலைக்கழகங்கள் சிறந்த மற்றும் வெளிப்படையாக விவாதிக்கும் களமே தவிர, அச்சுறுத்தல் விடுக்கும் களமல்ல, அச்சுறுத்தலை விட உரையாடலே கருத்து பரிமாற்றத்துக்கு சிறந்த களமாக அமையும். எதிர்காலத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு மாணவர் அமைப்பில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





