உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரி தற்கொலை - உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்
குளியாபிட்டிய நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வெள்ளிக்கிழமை நீதவான் விசாரணையை நடத்தினார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரி நிதி மோசடி தொடர்பில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரின் மரணம் தற்கொலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூறாய்வுப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நீதித்துறை மருத்துவ ஆலோசனைக் குழு, உடலில் காணப்பட்ட அனைத்துக் காயங்களும் அவராகவே ஏற்படுத்திக்கொண்டவை என்றும், மரணத்திற்கான காரணம் தற்கொலை என்றும் முடிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரங்க ராஜபக்ஷ என அடையாளம் காணப்பட்ட குறித்த அதிகாரி, 30-04-2026 அன்று குளியாபிட்டியவிலுள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது மகள் அவர் தோட்டத்தில் கிடப்பதைக் கண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்ததையடுத்து உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அருகில் இரத்தக் கறைகளைக் கவனித்துள்ளனர். அத்துடன் உயிரிழந்தவரின் உடலில் ஒரு காலில் வெட்டுக்காயங்கள் மற்றும் ஒரு கையில் காயம் உட்பட பல காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அருகில் இருந்து சிறிய கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொலையா, தற்கொலையா அல்லது விபத்தினால் ஏற்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஆரம்பத்தில் இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. குளியாபிட்டிய நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வெள்ளிக்கிழமை நீதவான் விசாரணையை நடத்தினார். பின்னர் உடல் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக குளியாபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திறைசேரி நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த அதிகாரியின் உடற்கூறாய்வுப் பரிசோதனையை முன்னெடுக்க நான்கு பேர் கொண்ட நீதித்துறை மருத்துவ ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





