சிற்றுண்டிகள், உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் யுத்த நிலைமையால் உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு அமைய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களின் சங்கம் தீர்மானிதுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்தார்.
கொழும்பில் 11-03-2026 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் யுத்த நிலைமையால் உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எமது நாட்டிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுக்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விலை அதிகரிப்புக்கு அமைய சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவகங்களின் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ரைஸ் என்ட் கறி, கொத்து ரொட்டி 25 ரூபாவால் அதிகரிப்படுகிறது. சிற்றுண்டி வகைகள் 10 ரூபாவாலும் ஒரு கோப்பை தேநீர் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதுடன் ஒரு கோப்பை பால் தேநீர், பராட்டா, முட்டை ரொட்டி ஆகியன 10 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை 300 ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எமது தொழிற்சாலை மற்றும் ஊழியர்களை பாதுகாத்துக்கொள்ளவே இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை சிறியளவில் அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். இதன் காரணமாக நுகர்வோருக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கும் வருந்துகிறோம்.
இந்த விலை அதிகரிப்பு கடந்த 8 மாதங்களுக்கு பின்னரே இடம்பெறுகிறது. கடந்த காலங்களில் ஆயிரம் ரூபாவுக்கு இருந்த கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையை நாங்கள் படிப்படியாக குறைத்து தற்போது ஓரளவுக்கு கொண்டுவந்தோம். லிட்ராே எரிவாயு 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நி்ச்சயமாக லாப் எரிவாயு 500 ரூபாவுக்கு மேல் அதிகரிக்குமென எதிர்பார்க்கிறோம் என்றார்.





