அமெரிக்க பிரதிநிதிகள் குழு பாராளுமன்றில் சந்திப்பு
நீண்டகால நிதி விளைவுகளை மதிப்பிடுவதற்கு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் ஏனைய நாடுகளிலுள்ள பாராளுமன்றங்களுக்கு ஆதரவளிக்கின்றன.
பாராளுமன்ற மேற்பார்வை மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்ட கொள்கை வகுத்தலை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஓரங்கமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றக்குழுக்களுக்கு ஒப்பீட்டளவிலான பகுப்பாய்வு ஆதரவை வழங்குவதற்காக ஒரு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது குறித்து இலங்கைப் பாராளுமன்றம் ஆராய்ந்துவருவதாகவும், இதுகுறித்து அமெரிக்கப் பாராளுமன்றத்திலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை அந்நாட்டு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனநாயகப் பங்காண்மை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் 8 - 12 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். இவ்விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகமானது ஜனநாயகப் பங்காண்மை ஆணைக்குழு மற்றும் அமெரிக்கப் பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகம் என்பவற்றுடன் இணைந்து, அரசாங்க செலவினங்கள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் முன்மொழியப்பட்ட சட்டமூலங்களை சுயாதீனமாகப் பகுப்பாய்வு செய்வதற்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதற்கு ஆதரவளித்து வருகிறது.
அதன்படி கொழும்பில் நடைபெற்றுவரும் ஒரு வாரகால தொழில்நுட்ப உதவிப் பரிமாற்றத்தின் ஓரங்கமாக ஜனநாயக பங்காண்மை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேகன் மூர் மற்றும் மேகன் கரோல், கிறிஸ்டி ஹாவ்லி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு தூதுக்குழுவானது வரவு, செலவுத் திட்ட மேற்பார்வை மற்றும் பொதுச்செலவினங்கள் தொடர்பில் கட்சி சார்பற்ற சுயாதீனமான பகுப்பாய்வை மேற்கொள்வதில் அமெரிக்கா பின்பற்றிவரும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதை முன்னிறுத்தி சுமார் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இந்த கலந்துரையாடல் பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் தேவைப்பாட்டை அடையாளங்காணல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது.
முன்மொழியப்பட்ட கொள்கைகள் மற்றும் சட்டமூலங்களினால் ஏற்படக்கூடிய பொருளாதார ரீதியிலான தாக்கங்கள் மற்றும் நீண்டகால நிதி விளைவுகளை மதிப்பிடுவதற்கு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் ஏனைய நாடுகளிலுள்ள பாராளுமன்றங்களுக்கு ஆதரவளிக்கின்றன. இந்நிலையில் பாராளுமன்ற மேற்பார்வை மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்ட கொள்கை வகுத்தலை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஓரங்கமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றக்குழுக்களுக்கு ஒப்பீட்டளவிலான பகுப்பாய்வு ஆதரவை வழங்குவதற்காக ஒரு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது குறித்து இலங்கைப் பாராளுமன்றம் ஆராய்ந்துவருகிறது. இதுகுறித்து அமெரிக்கப் பாராளுமன்றத்திலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை அந்நாட்டு பாராளுமன்ற வரவு, செலவு திட்ட அலுவலகத்தின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டனர்.





