உலகின் மிகச்சிறந்த உணவுக்கான 50 நாடுகளின் பட்டியலில் இலங்கை
கண்டி பிரதேசம் சோறும் கறியும், பாரம்பரிய இனிப்பு வகைகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளுக்கும், யாழ்ப்பாணம் நண்டு கறி, தோசை மற்றும் தனித்துவமான தமிழ் உணவு முறைகளுக்கும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.
2026 ஆம் ஆண்டுக்காக பிரகடனப்படுத்தப்பட்ட உலகின் மிகச்சிறந்த உணவுக்கான 50 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக டிரவல் அண்ட் டூர் வேர்ல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிரவல் அண்ட் டுவர் வேர்ல்ட் நிறுவனம் அண்மையில் வெளியிடப்பட்ட அவ்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகளாவிய உணவுசார் சுற்றுலாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நாடுகளை அங்கீகரிக்கும் வகையிலேயே இப்பட்டியலை எமது நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். உணவு கலாசார பாரம்பரியம், பிராந்திய உணவு பன்முகத்தன்மை, வீதி உணவு கலாசாரம், உயர்தர உணவு வகைகள், உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாடு, நிலைபேண்தகைமை, பானங்களின் பாரம்பரியம், கலாசார நம்பகத்தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கப்பெறும் ஒட்டுமொத்த உணவு அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தரவரிசை கணிப்பிடப்பட்டுள்ளது.
இவ் உணவுசார் தரவரிசைப் பட்டியலில் மெக்சிகோ முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு, இத்தாலி இரண்டாம் இடத்துக்கும், ஸ்பெயின் மூன்றாம் இடத்துக்கும் தெரிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஜப்பான் நான்காம் இடத்துக்கும், இந்தியா ஐந்தாம் இடத்துக்கும் தெரிவாகியுள்ள அதேவேளை, இலங்கை 50 ஆவது இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது.
ஐரோப்பா, ஆசிய-பசிபிக் பிராந்தியம், அமெரிக்க மற்றும் கரீபியன், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பிராந்தியங்களின் முன்னணி உணவுசார் சுற்றுலாத் தலங்கள் பலவும் இம்முறை வெளியிடப்பட்ட 50 சிறந்த நாடுகளின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இலங்கையானது நறுமணமிக்க வாசனைத் திரவியங்கள், வெப்பமண்டல மூலப்பொருட்கள் மற்றும் பல நூற்றாண்டுகால கலாசார உணவு செல்வாக்குகள் ஆகியவற்றின் மூலம், வீதியோர உணவுக்கூடங்கள் முதல் நேர்த்தியான கரையோர உணவகங்கள் வரை மறக்க முடியாத உணவு அனுபவங்களை வழங்கும் ஒரு உணவுசார் சுற்றுலாத் தலமாகும்.
சோறும் கறியும், கொத்து ரொட்டி, அப்பம், கடல் உணவு வகைகள் மற்றும் பல்வேறு வகையான இனிப்பு பண்டங்கள் என இலங்கையின் பாரம்பரிய உணவுகள் உலகெங்கிலும் உள்ள உணவுப் பிரியர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தவறவிடக்கூடாத 10 பிரதான உணவுசார் சுற்றுலாத் தலங்களை எமது அறிக்கையில் அடையாளப்படுத்தியுள்ளோம். கொழும்பு பிரதேசம் சோறும் கறியும், கொத்து ரொட்டி, அப்பம் மற்றும் புதிய கடல் உணவுகளுக்கு பெயர் பெற்று விளங்குவதுடன், காலி பிரதேசம் கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் காலனித்துவ கால உணவு முறைகளுக்கும், நீர்கொழும்பு பிரதேசம் கடல் உணவு கறிகள், சுடப்பட்ட மீன் மற்றும் ஏரி சார்ந்த உணவு வகைகளுக்கும் மிகவும் பொருத்தமான இடங்களாகும்.
கண்டி பிரதேசம் சோறும் கறியும், பாரம்பரிய இனிப்பு வகைகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளுக்கும், யாழ்ப்பாணம் நண்டு கறி, தோசை மற்றும் தனித்துவமான தமிழ் உணவு முறைகளுக்கும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.
அதேபோன்று, எல்ல பிரதேசம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள், இலங்கை உணவு வகைகள் மற்றும் மலைநாட்டு உணவு முறைகளுக்கும், நுவரெலியா பிரதேசம் தேயிலை சார்ந்த உணவுகள், மாப்பண்டங்கள் மற்றும் காலனித்துவ கால பாரம்பரிய உணவுகளுக்கும், மிரிஸ்ஸ, ஹிக்கடுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்கள் புதிய கரையோர கடல் உணவுகளுக்கும் பிரசித்தி பெற்ற உணவுசார் சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன.
இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரமானது, அதன் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்துவதோடு, குறிப்பாக தனித்துவமான உணவு மற்றும் கலாசார அனுபவங்களை எதிர்பார்க்கும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் என நம்புகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





