கடுகண்ணாவையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் பலி; மூவர் காயம்
தற்காலிகமாக அந்த வீதியை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததோடு, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கேகாலை - பஹல கடுகண்ணாவ பிரதேசத்தில், கனேதென்ன சந்திக்கு அருகில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று சனிக்கிழமை காலை 8.30 - 9 மணிக்கிடையில் இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்துக்குள் மூவர் மீட்கப்பட்டு மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் அதன் பின்னர் சுமார் 6 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர மீட்பு நடவடிகைகளின் பின்னர் மாலை 3 மணியளவில் பெண்ணொருவர் உயிருடன் மீட்க்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் மேலும் மூவர் சடலங்களாக மீட்க்கப்பட்டனர். அதன்படி, நேற்று மாலை வரை இந்த சம்பவத்தில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற தகவல்களின் அடிப்படையில் இராணுவம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய மீட்பு குழு மற்றும் தீயணைப்பு பிரிவின் மீட்புகுழு என்பவற்றுடன் பிரதேச மக்களும் மீட்பு பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
முன்னதாக இந்த மண்சரிவில் ஒருவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர்.
இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீதியோரக் கடை மற்றும் அதற்கருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மண்சரிந்து விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.
தற்காலிகமாக அந்த வீதியை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததோடு, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் அவ்வீதியில் ஒரு வழியூடான போக்குவரத்துக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டது.
'இந்த பிரதேசத்தில் 97 - 99 கிலோ மீற்றர் வரையான பிரதேசங்கள் மண்சரிவு அபாய எச்சரிக்கை மிக்கவை என்பது தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும், அந்த பாதையைப் பயன்படுத்துபவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.' என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக இராணுவத்தின் 8ஆவது சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக நம்பப்படும் நபர்களை மீட்கும் பணிகளை 16 இராணுவத்தினர் அடங்கி குழுவொன்றும், மேலும் 30 பேரடங்கிய குழுவொன்றும் நேற்று மாலை வரை முன்னெடுத்திருந்தன.





