இருவரும் இணையாமல் எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வரக் கூடாது: சாமர சம்பத்
நான் இந்த கட்சியை நேசிக்கவில்லை. ஆனால் கட்சி தலைவரை நேசிக்கின்றேன். அதனால் தான் அவர் கைது செய்யப்பட்ட போது விடியும் வரை சிறைச்சாலை வளாகத்தில் காத்திருந்தேன்.

ரணில் - சஜித் அடுத்த ஆண்டுக்குள் இணைய வேண்டியது கட்டாயமாகும். ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து களமிறங்கியிருந்தால் நாமே ஆட்சியமைத்திருப்போம். எனவே இருதரப்பும் இணையாமல் எம்மிடம் பேச்சுவார்த்தைக்கு வரக்கூடா தென பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் 20-09-2025 அன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அடுத்த ஆண்டுக்குள் ரணில் - சஜித் இணைய வேண்டியது கட்டாயமாகும். ஐக்கிய தேசிய கட்சியென்பது ஒரேயொரு ஆசனத்தைக் கொண்டு பாராளுமன்றத்தை பாதுகாத்த கட்சியாகும். இந்த கட்சி என்றும் வீழாது, வீழ்த்தவும் முடியாது.
நான் இந்த கட்சியை நேசிக்கவில்லை. ஆனால் கட்சி தலைவரை நேசிக்கின்றேன். அதனால் தான் அவர் கைது செய்யப்பட்ட போது விடியும் வரை சிறைச்சாலை வளாகத்தில் காத்திருந்தேன்.
ஏனைய கட்சிகளின் 133 வாக்குகளுடன் ஐ.தே.க.வின் ஒரேயொரு வாக்குடன் நாம் ஜனாதிபதியாக்கிய ரணில் விக்கிரமசிங்க அதல பாதாளாத்திலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாட்டுக்காக ரணில் என்ன செய்திருக்கின்றார் என்று கேட்டார். ரணில் ஒரேயொரு விடயத்தை தவிர ஏனைய அனைத்தையும் செய்திருக்கின்றார்.
அதாவது 2022இல் பாராளுமன்றத்தை தீக்கிரையாக்க முயற்சித்த ஜே.வி.பி.யினரை சிறையிலடைப்பதைத் தவிர ரணில் ஏனைய அனைத்தையும் செய்திருக்கிறார். அதை செய்திருந்தால் இன்று அனைவரும் சிறையில் இருந்திருப்பார்கள்.
மஹிந்த ராஜபக்ஷவால் விமான நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டபோது, விமான நிலையம் அமைத்து அங்கு விமானம் வந்தால் அது செய்தியா என்று அநுர கேள்வியெழுப்பினார்.
அவ்வாறெனில் பஸ் தரிப்பிடத்துக்கு நிறப்பூச்சி பூசுவது மாத்திரம் என்ன செய்தியா என்று நான் அவரிடம் கேட்கின்றேன். பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் நாம் அரசாங்கத்துக்கு எதிரான அனைத்தையும் செய்வோம். எமக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் அனைவருக்கும் 65 இலட்சம் வாக்குகளே உள்ளன. ஆனால் சஜித் தரப்புக்கு தனித்து 65 இலட்சம் வாக்குகள் உள்ளன.
எமது வாக்குகளே அநுரவிடமுள்ளன. ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதால் அநுரவிடமுள்ள மஹிந்தவின் வாக்குகள் குறைவடையும். எனவே இவர்கள் இருவரும் இணைந்தால் பேரூந்து நிரம்பிவிடும். பின்னர் எமக்கும் அங்கு இடமிருக்காது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் இணைந்து களமிறங்கியிருந்தால் 66 இலட்சம் பெற்று ஆட்சியமைத்திருப்போம். எனவே இனியாவது ஒன்றிணையுங்கள். இருதரப்பும் இணையாமல் எம்மிடம் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என்றார்.