ஒக்டோபரில் சீனா செல்லும் பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும் முன்னேற்றப்பாதையிலேயே பயணிக்கின்றது. அதற்கு சகல நாடுகளதும் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.
பிரதமர் ஹரணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஒக்டோபரில் சீனா செல்லவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீன தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு 25-09-2025 அன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் சார்பில் சீனாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை ஏற்றுக் கொண்ட பிரதான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
அன்றிலிருந்து தொடரும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒக்டோபரில் பீஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார். அதேபோன்று சீனாவின் 'ஒரு சீன' கொள்கையையும் எமது வெளிநாட்டுக் கொள்கைளின் ஊடாக ஸ்திரமாக ஏற்றுக் கொள்கின்றோம்.
இலங்கை பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும் முன்னேற்றப்பாதையிலேயே பயணிக்கின்றது. அதற்கு சகல நாடுகளதும் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது 15 இணக்கப்பாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதற்கமைய சீனாவிடமிருந்து 500 மில்லியன் நன்கொடையாக வழங்கப்பட்டதை மறக்க முடியாது.
இது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பேருதவியாக அமையும். 1949ஆம் ஆண்டு சீனா 'சீன மக்கள் குடியரசாக' அறிவிக்கப்பட்ட போது அதனை அங்கீகரித்த முதலாவது நாடு இலங்கையாகும். இது எமது நாடுகளுக்குமிடையிலான நட்புறவுக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். இதேபோன்று தொடர்ந்தும் சீனாவுடன் நல்லுறவைப் பேணுவதே இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றார் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





