பிரதமர் பொறுப்புக்கூறி பதவி விலக வேண்டும்: தலதா
கல்வி மறுசீரமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த குழப்ப நிலையில்,இவர்கள் இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் இறக்கி, இரத்தக் களறியை ஏற்படுத்தி இருப்பார்கள்.
தரம் 6 பாடப்புத்தகத்தில் ஏற்பட்டுள்ள பிழையான உட்புகுத்தல் தவறுதலாக ஏற்பட முடியாது. அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதனாலே பிரதமரை கல்வி அமைச்சு பதவியில் இருந்து விலகுமாறு தெரிவிக்கிறோமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் 12-01-2026 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது. தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த தவறு பாரதூரமான விடயமாகும். இந்த பிழை தவறுதலாக ஏற்பட்ட ஒன்று என ஒருபோதும் தெரிவிக்க முடியாது. திட்டமிட்டே மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஏனெனில் பாடப்புத்தகம் தயாரிக்கும்போது அதற்கு கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவனம், கல்வி அமைச்சு மற்றும் பிரதமரால் நியமிக்கப்பட்ட கல்வியலாளர்களைக் கொண்ட நிபுணர்கள் குழு என இவர்கள் அனைவரும் இணைந்தே இந் பணியை மேற்கொண்ள்ள வேண்டும்.
மேலும் 1980 காலப்பகுதியில் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அது தொடர்பில் ஒரு வெள்ளை கடதாசி தயாரிக்கப்பட்டு, ஆலாேசனை பெறப்பட்டது. அந்த ஆலாேசனை கூட்டத்துக்கு பெற்றோர்கள் உள்ளிட்ட ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் வந்து, தங்களின் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.அன்று மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். ஆனால் இவர்களின் இந்த கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் யாருடனும் கலந்துரையாடவில்லை. தற்போது தற்காலிகமாக பதவி விலகியுள்ள தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருக்காவது இடம்பெற்றுள்ள திருத்தங்கள் என்ன என தெரியுமா தெரியாது.
அத்துடன் கல்வி மறுசீரமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த குழப்ப நிலையில்,இவர்கள் இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் இறக்கி, இரத்தக் களறியை ஏற்படுத்தி இருப்பார்கள்.
அதேநேரம் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான ஒரு போராட்டமாக இதனை அவர்கள் அமைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவ்வாறான ஒரு நிலை இல்லாமல் ஜனநாயக முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாலே அரசாங்கம் இன்னும் இதனை பிடித்துக்கொண்டிருக்கிறது.
எனவே கல்வி அமைச்சராக பிரதமர் சிறந்த பெண் என்றால்,ஏற்பட்டிருக்கும் இந்த தவறை ஏற்றுக்கொண்டு கல்வி அமைச்சை ராஜினாமா செய்ய வேண்டும். ஏனெனில் இவ்வளவு பெரிய தவறு இடம்பெற்றும் அதுதொடர்பில் கல்வி அமைச்சர் என்றவகையில் பிரதமருக்கு தெரியாது என்றால், அவரால் அந்த அமைச்சை கொண்டு செல்ல முடியாது. அதனால் அவர் பதவி விலகி அந்த அமைச்சை முன்னெடுத்துச்செல்ல முடியுமான ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றார்.





