வட, கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்கள் பாரிய போராட்டம்
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர்கள்.

சர்வதேச வலிந்து காணமல் ஆககப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று சர்வதேசத்தை வலியுறுத்தி வடக்கிலும், கிழக்கிலும் அவர்களின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் 30-08-2025 அன்று வடக்கில் செம்மணியிலும், கிழக்கில் காந்திபூங்காவிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வடக்கு
யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா முன்றலில் நேற்றுக் காலை 10 மணியளவில் ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து பேரணியாக செம்மணி வீதியூடாக மனிதப் புதைகுழி காணப்படும் சித்துப்பாத்தி பகுதிக்கு அண்மையாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் வேதனைகளையும் நீதிக்கோரிக்கையினை சுமந்தவாறு வாகன ஊர்தி முன்செல்ல பேரணியாக அனைவரும் சென்றிருந்ததோடு தமிழின அழிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகளுக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோசங்களை எழுப்பினார்கள்.
ஆக்கிரமிப்பு முடிவுறுத்தப்பட வேண்டும், தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு இறப்புச்சான்றுதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவர்கள் யார்? காணாமலாக்கப்பட்டவர்களுக்கு அரசின் பதில் என்ன? உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
போராட்டத்தின் இறுதியில் செம்மணி மனிதப் புதைகுழியில் மரணத்தவர்களுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவியும், செயலாளரும் ஐ.நா. பிராந்திய அலுவலகத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கான மகஜரையும் கையளித்தனர்.
கிழக்கு
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திற்கு அருகில் உயிர்நீர்த்த உறவுகள் மற்றும் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களை தேடி உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பேரணியானது ஆரம்பமானது.
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் வேதனைகளையும் நீதிக்கோரிக்கையினை சுமந்தவாறு வாகன ஊர்தி முன்செல்ல வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பேரணியானது மட்டக்களப்பு நகரை நோக்கிச்சென்றது.
ஆயிரக்கணக்கான வலிந்துகாணாமலாக்கப்பட்ட உறவுகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் காணாமல்போன தமது உறவுகளின் புகைப்படங்களை எந்தியவாறும் இந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
புதிய கல்லடி பாலம் ஊடாக மட்டக்களப்பு பிரதான வீதியூடாக மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் ஊர்வலம் சென்றதுடன் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவ்pயலாளர்கள் நினைவுத்தூபியில் தமிழ் மக்களின் உரிமைக்காக ஊடகப்பணியாற்றி படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர்கள்.
போராட்டத்தினை வட,கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினால் ஐநா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்புவதற்கான மகஜர் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகியால் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.