தெல்லிப்பழை வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நடவடிக்கையில்லை: அர்ச்சுனா எம்.பி
தங்களுடைய அரசாங்கம் இவ்வாறான திட்டமிட்ட ஊழல்களுக்கு எந்த நடவடிக்கை எடுக்காமலும் விசாரணைகள் மேற்கொள்ளாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?

தெல்லிப்பழை வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பலல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறையாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் இதுவரையில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு எம்.பி.யான அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் 19-08-2025அன்று நிலையியல் கட்டளைகள் 27/2இன் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு மாகாணத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கான ஒரே ஒரு புற்றுநோய் வைத்தியசாலையாக தெல்லிப்பழை வைத்தியசாலை அமைந்திருக்கிறது. தெல்லிப்பழை வைத்தியசாலையின் ஒரு பகுதியாக புற்றுநோய் பிரிவு இயங்கி வருகிறது. இவ் வைத்தியசாலை மாகாண அமைச்சின் கீழ்வரும் பி பிரிவு ஆதார வைத்தியசாலை ஆகும். இந்த வைத்தியசாலையில் கணக்காளர் ஒருவர் கடமையாற்றுவதில்லை. இந்த வைத்தியசாலை நேரடியாக பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் கேதீஸ்வரனின் கீழும் மற்றும் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் சமன்பத்திரனவின் கீழும் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவில் பொறுப்பு வைத்தியராக கடமைபுரியும் வைத்தியர் கிருசாந்தி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான தனிப்பட்ட பண கொடுக்கல் வாங்கல்களை செய்து கொண்ட வங்கி கணக்கிலக்க புத்தகங்கள் இரண்டு பிடிபட்டிருப்பதும் அது தவிரவும் வைத்தியர் கேதீஸ்வரன் புற்றுநோய் பிரிவுக்கான மாகாண பொதுச் செயலாளரின் அனுமதியின்றி 30 மில்லியன் பெறுமதியான கட்டட ஒப்பந்தம் ஒன்றை முறையற்ற விதத்தில் மேற்கொண்டு இருப்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருந்தும் இதுவரை சுகாதார அமைச்சினுடாகவும் அதே நேரம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவாலும் (2025.06.03 ) முறையிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்பும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இது இந்த அரசாங்கம் தெற்கில் மட்டும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை பயன்படுத்தி அரசியல் ரீதியான பழிவாங்கல்களை மேற்கொள்கின்றது என்பதற்கு சிறந்த உதாரணமாக பொது மக்களால் எடுத்துக்கொள்ளப்படக்கூடும்.இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை கேட்க விரும்புகிறேன். அதாவது, இந்த விடயம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் முறையாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் (2025.06.03) இன்று வரை சம்பந்தப்பட்ட இது வைத்தியர்களும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
2015 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சம்பந்தப்பட்ட புற்றுநோய் அலகிற்கு பொதுமக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரசாங்கத்தின் கணக்கில் வைப்பில் இடப்படாத பணம் எவ்வளவு? இந்த நிதி மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிற்கு ஆராய அதிகாரம் உண்டா?
புற்றுநோய் வைத்தியர் கிருசாந்தியால் பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் கேதீஸ்வரனின் அனுசரணையுடன் பொதுமக்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது தங்களுக்கு தெரியுமா? அப்பணம் தனிப்பட்ட வங்கி இலக்கங்களில் இடப்பட்டு வைத்தியசாலையில் இருந்து களவாடப்பட்டது தங்களுக்கு தெரியுமா? தெரிந்திருந்தும் ஏன் இன்றுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை?
ஒரு வைத்தியசாலையின் கன்சல்டன் ஒருவர் பொதுமக்கள் இடம் இருந்து நன்கொடையினை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரியாமலும் கேதீஸ்வரன் அனுசரணையுடன் பெற்றுக் கொண்டு நிதி நடவடிக்கையில் ஈடுபட முடியுமா?
அந்த வைத்திய சாலையில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் கட்டட ஒப்பந்தக்காரர் இருவருக்கும் இடையே ஒப்பந்தமின்றி தனிப்பட்ட ரீதியில் முப்பது மில்லியன் பெறுமதியான ஒப்பந்த ஒன்றை வைத்தியர் கேதீஸ்வரன் செய்திருப்பது தெரியுமா? அவ்வாறான ஒப்பந்தம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடாக வழங்கப்பட்டும் ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
இந்த விடயங்கள் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் பாராளுமன்றத்திலும் மேலதிகமாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டு இதுவரை சம்பந்தப்பட்ட வைத்தியர் கைது செய்யப்படாதது ஏன்?
தங்களுடைய அரசாங்கம் இவ்வாறான திட்டமிட்ட ஊழல்களுக்கு எந்த நடவடிக்கை எடுக்காமலும் விசாரணைகள் மேற்கொள்ளாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?
இனிமேலாவது இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட கணக்கு இலக்கம் ஆராயப்பட்டு சம்பந்தப்பட்ட கட்டட ஒப்பந்தம் ஆராயப்பட்டு அவர்களை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த முடியுமா? எனக்கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இரு வார கால அவகாசம் கோரினார்.