ருஷ்டியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக மொஹமட் ருஷ்டி கடந்த மார்ச் 22 ஆம் திகதி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதன் மூலம் மொஹமட் லியதீன் மொஹமட் ருஷ்டியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக மொஹமட் ருஷ்டி கடந்த மார்ச் 22 ஆம் திகதி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். அதனையடுத்து ருஷ்டி சட்டவிரோதமான முறையில் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு அவரது தாயார் ஹனீஃபா பதுர்னிஸாவினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டது.
அம்முறைப்பாட்டுக்கு அமைவாகவும், தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் தன்னியல்பாகவும் இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணத்திலேயே மொஹமட் ருஷ்டியின் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி கைதுசெய்து, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதன் விளைவாக சட்டத்துக்கு ஏற்புடைய தொழிலில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை இழந்தமை உள்ளடங்கலாக ருஷ்டிக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக அவருக்கு 200,000 ரூபாவை செலுத்துமாறு ஆணைக்குழு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
அத்தோடு இப்பரிந்துரைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நடைமுறைப்படுத்துமாறும், அதன் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.





