யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிரான கறுப்பு பண சுத்திகரிப்பு விவகார வழக்கு - சாட்சி விசாரணைகள் ஆரம்பம்
இப்போது ஒரு பிரதிவாதி மட்டுமே இருப்பதால் சதித்ததிட்டம் தீட்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது என பிரதிவாதிகள் சார்பில் இந்த அடிப்படை ஆட்சேபனம் முன்வைக்கப்பட்டிருந்தது.
சுமார் 73 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை மோசடியான முறையில் கையகப்படுத்திக் கொண்டதாக கூறப்படும். கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அடிப்படை ஆட்சேபனங்களை நிராகரிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணத்துங்க இது தொடர்பிலான உத்தரவை நேற்று 14-05-2026 அன்று பிறப்பித்தார்.
யோசித்த ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த அடிப்படை ஆட்சேபணங்களை நிராகரிப்பதாக அறிவித்த நீதிபதி உதேஷ் ரணத்துங்க சதித்ததிட்டம் தீட்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டை மையப்படுத்தி முன்வைக்கப்பட்டிருந்த அந்த ஆட்சேப்பணங்கள் அடிப்படையற்றவை என திறந்த நீதிமன்றில் அறிவித்தார். குற்றவியல் சட்டக்கோவையின் 113 (அ) அத்தியாயத்தின் பிரகாரம் சதித்திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டினை முன்னெடுத்து செல்வதற்கு பிரதிவாதிகள் இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டோரோ இருக்க வேண்டும் என பிரதிவாதிகள் சார்பில் மேல் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனம் முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதில் ஒரு பிரதிவாதியான டேசி டெய்சி ஃபொரஸ்ட் என்பவர் குற்றவியல் நடைமுறை நடைமுறை சட்டக்கோவையின் 194 வது அத்தியாயத்தின் பிரகாரம் விடுவிக்கப்பட்டிருந்தார். எனவே இப்போது ஒரு பிரதிவாதி மட்டுமே இருப்பதால் சதித்ததிட்டம் தீட்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது என பிரதிவாதிகள் சார்பில் இந்த அடிப்படை ஆட்சேபனம் முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் தீர்க்கப்பட்ட வழக்கு தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த விடயத்தை ஆராய்ந்திருந்த நீதிமன்றம் பிரதிவாதியான யோசித்த ராஜபக்ஷ சார்பில் முன்வைக்கப்பட்ட குறித்த அடிப்படை ஆட்சேபனத்தை அடிப்படையற்றது என நிராகரித்தது. இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சதித்ததிட்டம் தீட்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் ஒரு பிரதிபாதி மரணமடையும் சந்தர்ப்பத்தில் மற்றைய பிரதிவாதிக்கு எதிராக அந்த குற்றச்சாட்டை தொடர்ந்து விசாரணை செய்ய முடியும் என இதன்போது சுட்டிக்காட்டிய நீதிபதி உதேஸ் ரணத்துங்க , அதன்படி சதித்ததிட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டினை ஒரு பிரதிவாதி பிரதிவாதிக்கு எதிராகவும் முன்கொண்டு செல்ல முடியும் என அறிவித்தார்.





