மக்களுக்கு நிவாரணப் பொதியை பெற்றுக் கொடுங்கள் - எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும்
அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய மக்கள் நலச் செயல்பாடுகளுக்காக எதிர்க்கட்சி தனது பூரண ஆதரவைத் தரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய இக்கட்டான சூழலில் துன்பப்படும் மக்களுக்குப் பாரிய நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொடுக்குமாறும், அதற்காக எதிர்க்கட்சியாகிய நாம் தேவையான அனைத்து ஆதரவுகளையும் பெற்றுத் தருவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை 31-03-2026 அன்று வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய போர் நிலைமைக்கு மத்தியில் நமது நாட்டின் பொருளாதாரம் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. குறிப்பாக, எண்ணெய் விலை ஏற்றத்தால் ஒட்டுமொத்த வருமான வழிகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பல தொழில்கள் சரிவடைந்துள்ளன. அத்துடன் உற்பத்தி மற்றும் சேவை செயன்முறைகளும் முற்றாக முடங்கிப்போயுள்ளன. மேலும் தரம் குறைந்த நிலக்கரிப் பயன்பாட்டால் நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பிற்கு பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் வழமையை விட 147 மெகாவாட் குறைவாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் என்பன சடுதியாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் என்பன உச்சம் தொட்டுள்ளமையால், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திச் சுழற்சி, மக்களின் வாழ்வாதாரம், தொழில்கள் மற்றும் வருமான வழிகளில் பாரிய எதிர்மறைத் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு ஒரு மரணப் பொறியில் சிக்கியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனவே, நாட்டில் அதிகரித்துள்ள எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும், அதற்காக அரசாங்கம் தனது திறைசேரியில் சேமித்து வைத்திருப்பதாகக் கூறிவரும் மேலதிக நிதி கையிருப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
இப்போதாவது மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு ஏதுவாக, சர்வதேச நாணய நிதியத்துடன் அவசரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு விசேட நிவாரணப் பொதியைக் கூடிய விரைவில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அவை உள்ளவாறே பாதுகாப்பதற்காக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லை. மாறாக நாணய ஒப்பந்தத்தைப் புதுப்பித்து, மக்கள் நலனுக்குச் சாதகமான மற்றும் மக்களுக்கு ஆதரவான விதிமுறைகளை ஏற்படுத்தி, அந்த ஒப்பந்தத்தை முழுமையாக மானுடமயமாக்குவதற்கே இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். இது இந்த அரசாங்கத்தின் சமூகப் பொறுப்பும் நாட்டு மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட சமூக உடன்படிக்கையுமாகும்.
நாட்டு மக்களுடன் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட இவ்வாறானதொரு சமூக உடன்படிக்கை காணப்படுவதனால், அரசாங்கம் எதற்கும் அஞ்சாமல் நாணய நிதியத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன் மூலம் நாட்டில் நிலவும் எண்ணெய் விலை, ஏனைய எரிபொருள் விலைகள் மற்றும் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து, மக்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மக்களுக்கு உடனடி நிவாரணப் பொதியொன்றை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த மெத்தனப் போக்கு மற்றும் மந்தகரமான நடைமுறைகளால் இதுவரை நாட்டில் கடுமையான மருந்துப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு மூலப்பொருட்கள், விவசாய உரம் மற்றும் எண்ணெய் போன்றவற்றிற்கும் பாரிய தட்டுப்பாடுகள் நாட்டில் காணப்படுகின்றன. இதனால் மின்சாரத் துறையில் பாதுகாப்பற்றதொரு நிலை உருவாகி மீண்டும் மின் வெட்டு கூட ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
இதன் விளைவாக விவசாயிகள், மீனவர்கள் என அனைத்துத் துறைகளிலும் வாழும் மக்கள் பாரிய அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த நாடும் மேலும் கடுமையான அழுத்தத்திற்கும் அமைதியின்மைக்கும் ஆட்படாமல் இருப்பதற்கு இவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
எனவே, அரசாங்கம் இப்போதாவது தனது நீண்டகாலத் தூக்கத்திலிருந்து விழித்து, நாணய நிதியத்துடன் தீவிரமாக கலந்துரையாடி விரைவான நிவாரணப் பொதியொன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எண்ணெய் விலைகளையும் மின்சாரக் கட்டணங்களையும் குறைப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய மக்கள் நலச் செயல்பாடுகளுக்காக எதிர்க்கட்சி தனது பூரண ஆதரவைத் தரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.





