தொழில்சார் கல்விக்கான முதலீடு தேசிய முன்னேற்றத்திற்கான அடித்தளம்: பிரதமர் கலாநிதி ஹரிணி
போட்டித்தன்மை மிக்க பொருளாதாரம் என்பது முதலீடு மற்றும் உட்கட்டமைப்புகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, நிறுவனங்களைத் திறம்பட வழிநடத்தக்கூடிய தகுதிவாய்ந்த தொழில் நிபுணர்களின் மீதே தங்கியிருக்கின்றது.
திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் இணைப்பதும் அத்தியாவசியமானதென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை பட்டயப் பணியாளர் முகாமைத்துவ நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘அங்கீகாரத்தின் புதிய உச்சங்கள்’ எனும் கருப்பொருளிலான விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் கடந்த 18-02-2026 அன்று இந்நிகழ்வின்போது, SCQF 11 ஆம் மட்டத்தின் (Level 11) கீழ், QS தரச்சான்று பெற்ற புதிய பாடத்திட்டத்துடனான 'மனிதவள முகாமைத்துவத்தில் பட்டயத் தகைமை' (CQHRM) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது, தொழில்சார் மற்றும் தொழிற்கல்விப் பாதைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,
நமது கல்விப் பாதைகளையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதில் இந்தத் தருணம் மிகவும் முக்கியமானது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற, நிபுணத்துவ மற்றும் தொழிற்துறை சார்ந்த பல்வேறு வாய்ப்புகளை வழங்கக்கூடிய கல்விச் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
இது நாம் கல்வித்துறையில் ஆரம்பித்துள்ள சீர்திருத்தச் செயல்முறைகளுடன் ஒத்துப்போகின்றது. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயது எல்லைக்கு உட்பட்டது மாத்திரமல்ல, எவர் வேண்டுமானாலும் கல்வி கற்றுக்கொண்டே தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும், எனத் தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய முன்னுரிமைகளை முன்னிறுத்தி மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
இலங்கை பொருளாதார மீட்சி, நிறுவன ரீதியான சீர்திருத்தம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் இக்காலகட்டத்தில், திறமையான மற்றும் ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட மனிதவளத் தலைமைத்துவத்தின் தேவை இன்றியமையாதது. போட்டித்தன்மை மிக்க பொருளாதாரம் என்பது முதலீடு மற்றும் உட்கட்டமைப்புகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, நிறுவனங்களைத் திறம்பட வழிநடத்தக்கூடிய தகுதிவாய்ந்த தொழில் நிபுணர்களின் மீதே தங்கியிருக்கின்றது.
இந்த SCQF Level 11 மனிதவள முகாமைத்துவ பட்டயத் தகைமையானது, நிபுணர்களின் சர்வதேச அங்கீகாரத்தை வலுப்படுத்துவதுடன், நாட்டின் தொழில்சார் கல்வி முறைமை மீதான நம்பிக்கையையும் மேலும் உறுதிப்படுத்தும் என பிரதமர் குறிப்பிட்டார். அத்தோடு, நியாயமான ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பாதுகாப்பான பணிச்சூழல், பெண்களுக்கான தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணித்தள சமத்துவத்தை முன்னெடுப்பதில் மனிதவள முகாமைத்துவப் பிரிவின் வகிபாகம் குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தொழிற்துறையின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், பணியாளர் முகாமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாகத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.





