வலுசக்தி துறையில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம் - ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்த காரணத்தால் நாட்டுக்கு வருகைத்தரவிருந்த எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்ததால் கடந்த வாரங்களில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம்.வலுசக்தி துறையில் மட்டுமன்றி தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் போன்ற எவ்வகையிலான ஒத்துழைப்பையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 26-03-2026 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் குறித்து ரஷ்யாவிற்கு புரிதல் காணப்படுகிறது.
வலுசக்தி துறையில் மட்டுமன்றி தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் போன்ற எவ்வகையிலான ஒத்துழைப்பையும் இலங்கைக்கு வழங்கத் தயாராகவுள்ளோம். இரு நாடுகளின் பரஸ்பர புரிதல் தற்போதைய நிலையில் அத்தியாவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் உதவிகள் அக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டார்.
அண்மைக் காலத்திலும்கூட, இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ரஷ்யா முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெருமளவிலான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழங்கும் ஒத்துழைப்பையும், இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக கலாசார உறவுகளையும், சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
தோற்றம் பெற்றுள்ள பூகோள நெருக்கடியால் இலங்கை முகங்கொடுக்க நேரிட்டுள்ள சவால்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான வலுசக்தி துறையின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும், இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தல்இகுறிப்பாக எரிபொருள் விநியோகம், வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகால பங்காளித்துவத்துக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படப்பட்டது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சரை, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர், வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல மற்றும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன ஆகியோர் நேற்று (26) முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.
உலகளாவிய சந்தை நிலைமைகள் மாறிவரும் பின்னணியில், இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை, குறிப்பாக வலுசக்தி துறையிலான உறவுகளை மேலும் மேம்படுத்த இரு நாடுகளும் எடுத்து வரும் முயற்சியை இந்த விஜயம் பிரதிபலிக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்த காரணத்தால் நாட்டுக்கு வருகைத்தரவிருந்த எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்ததால் கடந்த வாரங்களில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக ரஸ்யாவிடமிருந்து 'அரசாங்கம் -அரசாங்கம்| என்ற அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.இதற்கமைவாகவே ரஸ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.





