முழுமையான நிதி அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவேண்டும் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
ஆணைக்குழுவுக்குத் தேவையான நிதி வரவு, செலவுத்திட்டத்தில் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்றும், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு ஆணைக்குழு முழுமையான நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவுக்குத் தேவையான நிதி வரவு, செலவுத்திட்டத்தில் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்றும், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு ஆணைக்குழு முழுமையான நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய மனித உரிமைகள் அமைப்புக்களின் உலகளாவிய கூட்டணியினால் வழங்கப்பட்ட 2024 மே 9 ஆம் திகதியன்று 'ஏ' தகுதி அந்தஸ்தைத் தொடர்ந்து பேணுவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
தற்போது ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் 'ஏ' அந்தஸ்து, ஆணைக்குழுவின் நியமன நடைமுறைகள் மற்றும் பணிகள் பாரிஸ் கொள்கைகளுக்கு ஏற்றவாறு அமைந்திருப்பதை உறுதிப்படுத்துவதாக ஆணைக்குழு அதன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை இந்த அந்தஸ்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு நடைமுறைப்படுத்தவேண்டிய விடயங்கள் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகளையும் ஆணைக்குழு அக்கடிதத்தில் உள்ளடக்கியுள்ளது.
அதற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களுடன் இணைந்து ஆக்கபூர்வமாக செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 10 ஆவது பிரிவு திருத்தப்படவேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆணைக்குழுவுக்குத் தேவையான நிதி வரவு, செலவுத்திட்டத்தில் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்றும், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு ஆணைக்குழு முழுமையான நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு ஆணைக்குழுவின் நியமனங்கள் பாலினம் உள்ளிட்ட இலங்கையின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.





