சீனாவின் ஒரு தேசக்கொள்கைக்கு இலங்கை முழுமையாக ஆதரவு: பிரதி சபாநாயகர்
சீனா, சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு தன்னுடைய முழுமையான ஆதரவினை அளிப்பதோடு பொருளாதார நெருக்கடியான சூழல்களிலும் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது.
சீனாவின் ஒருதேசக் கொள்கையை இலங்கை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பு இலங்கையின் மீட்சிக்கு பேருதவியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு இரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் தலைமையில் 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வு குறித்த விளக்கவுரையை வழங்கும் நிகழ்வு 23-12-2025 அன்று ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் முழுமையான அமர்வில் வகுக்கப்பட்டுள்ள அடுத்த ஐந்து வருடங்களுக்கான திட்டங்கள் மற்றும், 15 வருடங்களுக்கான திட்டங்கள் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் அண்மைய காலத்தில் பேரிடரால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டெழுவதற்கான துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அனர்த்த காலத்தில் சீனா நிவாரண உதவிகளையும், நிதி உதவிகளையும் உடனடியாகவே வழங்கி தனது வரலாற்று நெடுகிலுமான இருதரப்பு நட்புறவை வெளிப்படுத்தியுள்ளது. அதற்காக ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையிலான தொலைநோக்குள்ள அரசாங்கத்துக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சீனாவினுடைய காலநிலைமாற்றம் சம்பந்தமான கொள்கைகளையும், அனர்த்த முகாமைத்துவ திட்டங்களையும், உட்கட்டமைப்பு மீள்கட்டுமான பொறிமுறைகளையும் இலங்கை அதியுச்சமானதாக கருதுவதோடு அவை தற்போதைய பேரனர்த்தத்திலிருந்து மீண்டெழுவதற்கு பெருமளவில் உதவிகளை அளிக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமானது, புதிய இலங்கையை கட்டியெழுப்புவதிலும் டிஜிட்டல் மயமாக்கம், நவீன மயப்படுத்தல், பல்வகைமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் அதீதமாக கவனம் செலுத்துவதோடு இந்த விடயத்தில் சீனாவின் அதியுயர் பெறுமானங்களை பகிர்ந்து கொள்வதிலும் அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.
சீனா, சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு தன்னுடைய முழுமையான ஆதரவினை அளிப்பதோடு பொருளாதார நெருக்கடியான சூழல்களிலும் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது. அத்தோடு பட்டி மற்றும் பாதை முன்முயற்சித்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக இலங்கையில் பல்வேறு துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்து வருகின்றது.
இவ்வறான நிலையில், சீனாவின் வலுவமான ஒரே தேசக் கொள்கையை இலங்கை முழுமையாக ஆதரிப்பதோடு, நிலையானதும், உறுதியுமான இருதரப்பு உறவுகள் மேலும் விரிவடைந்து இருநாடுகளும் பரஸ்பரம் எதிர்கல முன்னேற்துக்காகச் செயற்படும் என்ற திடமான நம்பிக்கை உள்ளது என்றார்.





