தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை : டிஜிட்டல் தேசிய அடையாள திட்டம் குறித்து நளிந்த
செயற்திட்டத்துக்கான செலவுகளில் 50 சதவீதம் இந்தியா நன்கொடையாக வழங்குகிறது.இதில் பங்கேற்கும் இந்திய நிறுவனம் விலைமனுகோரல் ஊடாகவே தெரிவு செய்யப்படும்.

டிஜிட்டல் தேசிய ஆளடையாள அட்டை செயற்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அமல்படுத்தப்பட்ட போதும் இவ்வாறு தான் குறிப்பிட்டார்கள். டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை செயற்திட்டத்துக்கு இந்தியாவின் நன்கொடை கிடைத்துள்ளது. விலைமனுக்கோரல் விடயத்தில் இந்தியா ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சரவை பேச்சாளரும்,அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு தனது பெயர்,பிறந்த திகதி உள்ளிட்ட விபரங்கள் எங்கேனும் செல்லும் என்ற பயம் உள்ளது.இந்த விடயத்தில் எவரும் அச்சமடைய தேவையில்லை.பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நாட்டு மக்களின் தனிப்பட்ட தரவுகள் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்திடம் உள்ளது.இந்த திணைக்களம் இந்தியாவுக்குரியதல்ல, இலங்கைக்கு சொந்தமானது. தேசிய கட்டமைப்பின் ஊடாக ஆட்பதிவுத் திணைக்களம் தனிப்பட்டவர்களின் தரவுகளை உறுதிப்படுத்துகிறது.
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை செயற்திட்டத்துக்கு இந்திய அரசாங்கம்; முழுமையாக ஒத்துழைப்பளிக்கிறது. செயற்திட்டத்துக்கான செலவுகளில் 50 சதவீதம் இந்தியா நன்கொடையாக வழங்குகிறது.இதில் பங்கேற்கும் இந்திய நிறுவனம் விலைமனுகோரல் ஊடாகவே தெரிவு செய்யப்படும்.
இந்த செயற்திட்டத்துக்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே தனிப்பட்ட தரவு தொடர்பில் எவரும் அச்சமடைய தேவையில்லை. 2002 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் தரவு பாதுகாப்பு மற்றும் தரவு இரகசியத்தன்மை பேணல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது.
தமது தனிப்பட்ட தரவுகள் பிற நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது அல்லது வெளிப்படுத்தப்பட்டுள்ளது எவரேனும் சந்தேகித்தால் 2002 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றத்தை நாட முடியும். வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
விமல் வீரவன்சவின் பயம் பற்றி நாங்கள் ஆச்சரியமடைய போவதில்லை. 1990 சுவசெரிய அம்புலன்ஸ் வண்டிச் சேவை அமல்படுத்தப்பட்ட போதும், அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் மற்றும் விமானிகள் ஊடாக தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்கள்.அவ்வாறேனும் நடந்ததா,
விலைமனுக்கோரல் விவகாரத்தில் இந்தியா எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை.இந்தியாவின் தொழில்நுட்ப சேவை இயலுமை தொடர்பில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இதன் பின்னரே இந்த செயற்திட்டத்தை மீள ஆரம்பித்துள்ளோம்.
வெளிப்படைத்தன்மையுடன் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய முயற்சியாளர்கள் எவரேனும் இருப்பார்களாயின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்றார்.