சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு என்ன நடந்தது?: அஜித் மான்னபெரும கேள்வி
எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சிங்கப்பூர் வணிக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.இந்த கப்பல் விபத்துக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்னவென்று முன்னாள் சுற்றாடற்றுறை அமைச்சர் அஜித் மான்னபெரும கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் 30-07-2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த கப்பல் 2021.05.21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் தீ விபத்துக்குள்ளாகியது.
சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு கப்பலில் ஏற்பட்ட திரவ கசிவு காரணமாக இந்த கப்பல் கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது.இருப்பினும் அந்த நாடுகளின் துறைமுக அதிகாரிகள் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
நைற்றஜன் அமில கசிவுக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் 17.6கிலோமீற்றர் அப்பாற்பட்ட பகுதியில் நங்கூரமிடப்பட்டது.இந்த கப்பல் 2021.05.21 ஆம் திகதியன்று முழுமையாக தீ விபத்துக்குள்ளாகியது.இந்த விபத்து தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த கப்பல் விபத்தால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரியதொரு பாதிப்பு ஏற்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரமும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்நிலையும் பாதிக்கப்பட்டன.சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக இலங்கையில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று துறைசார் மேற்பார்வை குழுவில் முன்னிலையான பல்வேறு தரப்பினர்கள் குறிப்பிட்ட நிலையில் அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளாமல் சிங்கப்பூர் வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சிங்கப்பூர் வணிக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இந்த கப்பல் விபத்துக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.