இஸ்ரேல் இலவச விசாவால் பாதுகாப்பு அச்சுறுத்தலில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால
எம்மைப்பொறுத்தவரையில் இதுகாலவரையில் பயணிகள் உள்வருகையின்போது முறையாக பின்பற்றுவதற்கான முறைமையொன்று காணப்படவில்லை. அதன் காரணத்தினாலேயே நாம் புதிய முறைமையை அமலாக்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை. அத்துடன், குறித்த விசா நடைமுறை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அதேநேரம், இலவச விசா நடைமுறையானது ஆறுமாதங்களுக்கு ஒருதடவை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதோடு விமான நிலையில் விசேட கண்காணிப்பு ஏற்பாடுகளும், பயணிகளை முன்கூட்டியே பரிசோதனை செய்வதற்கான பொறிமுறைகளும் உள்ளடக்கப்பட்ட 'புதிய முறைமை' உருவாக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் உள்ளிட்ட நாற்பது நாடுகளுக்கு இலவசமாக விசா வழங்குவதற்கு அரசாங்கம் அறிவிப்பைச் செய்துள்ள நிலையில், இஸ்ரேலில் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளிட்டவர்கள் நாட்டுக்குள் வருகை தரும் நிலைமைகள் இலகுவாக்கப்படுவதால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும் என்று எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் தான் இலவச விசா முறைமையை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில்,
அதனை தேசிய பாதுகாப்புடன் இணைத்துப் பார்ப்பது பொருத்தமில்லை. மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச விசா விடயமானது சட்டமா அதிபரிடத்தில் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அவ்வாறு நடைமுறைக்கு வந்தால் கூட இலவச விசா அறிவிப்பால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.
தற்போதைய நிலையில் விமான நிலையத்தில் பயணிகள் வருகையில் அதிநவீக கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனைவிடவும், நாட்டிற்கு வருகை தருவதற்கு முன்னதாகவே பயணிகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வற்கான பயணத்தின் முன்னரான தகவல்கள் சேகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தான் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சர்வதேச குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டவர்கள் அடைளயாளம் காணப்பட்டு கைது செய்யப்படுகின்றார்கள். இந்தச் செயற்பாட்டை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதனைவிடவும், இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்படவுள்ளன. அதற்கான கேள்வி அனுமதிப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. அம்முறை அமலாக்கப்படுகின்றபோது, பயணிகள் குறித்த தரவுகள் மேலதிகமாக கிடைப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
எம்மைப்பொறுத்தவரையில் இதுகாலவரையில் பயணிகள் உள்வருகையின்போது முறையாக பின்பற்றுவதற்கான முறைமையொன்று காணப்படவில்லை. அதன் காரணத்தினாலேயே நாம் புதிய முறைமையை அமலாக்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
இதேநேரம், இலவச விசா வழங்கும் நடவடிக்கைகளை நாம் அமலாக்கியதன் பின்னர் ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கும் மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.





