மேலதிக எரிபொருளை எமக்கு விநியோகியுங்கள் - இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை
இம்மாதம் 27, 30ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 8, 9ஆம் திகதிகளிலும் சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் கப்பல்கள் வருகை தரவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையை அடுத்து, தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை இந்தியாவிடம் மேலதிக எரிபொருள் விநியோகக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்துத் தெரிவிக்கையில், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளிடமிருந்து டீசல் விநியோகத்துக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
'இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகத் திகழ்கிறது. எனினும், இந்தியாவின் சொந்தத் தேவைகள், சுத்திகரிப்புத் திறன் மற்றும் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த கோரிக்கைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறிப்பாக பங்களாதேஷூக்கு 2017 முதல் குழாய் வழித்தடம் மற்றும் ரயில் மூலம் டீசல் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நிலவும் பிராந்தியத் தேவைகள் விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சுட்டிக்காட்டினார். கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த 21 எரிபொருள் கப்பல்களில் 17 கப்பல்கள் இந்தியாவிலிருந்தே வந்துள்ளதாகவும், ஏனையவை சிங்கப்பூர் மற்றும் ஓமானிலிருந்து வந்துள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டிருந்தார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை சிங்கப்பூரிலிருந்து தொடர்ச்சியாக எரிபொருள் கப்பல்கள் வருகை தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது இந்தியாவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 27, 30ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 8, 9ஆம் திகதிகளிலும் சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் கப்பல்கள் வருகை தரவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டால் மாத்திரமே மீண்டும் கியூ.ஆர். குறியீட்டு முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், தற்போது அதற்கான அவசியம் இல்லை. எனவே மக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிப்பதைத் தவிர்த்தால், எவ்விதத் தடையுமின்றி விநியோகத்தைத் தொடர முடியும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 100 டொலர்களைத் தாண்டியுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியன் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





