வட,கிழக்கு மக்கள் இனவாதத்தை தோற்கடித்துள்ளார்கள்: பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
நிதி முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவை முறையாக நிதி ஒழுக்கத்துடன் பயன்படுத்தப்படும். பெற்றுக்கொள்ளப்படும் கடனில் ஒவ்வொரு ரூபாவுக்கும் நாங்கள் பொறுப்புக்கூறுவோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இரண்டாவது தடவையாகவும் இனவாதத்தை தோற்கடித்துள்ளார்கள். ஹர்த்தாலை தோற்கடித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எம்.ஏ.சுமந்திரனின் நிலை கவலைக்குரியது. என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 19-08-2025அன்று நடைபெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடன் பெற போவதில்லை என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் வரையறையற்ற வகையில் அரச முறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது ஆனால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
நிதி முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவை முறையாக நிதி ஒழுக்கத்துடன் பயன்படுத்தப்படும். பெற்றுக்கொள்ளப்படும் கடனில் ஒவ்வொரு ரூபாவுக்கும் நாங்கள் பொறுப்புக்கூறுவோம்.
வடக்கு மற்றும் கிழக்கில் அமல்படுத்தப்பட்ட ஹர்த்தால் வெற்றி என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹர்த்தால் தோல்வி என்றே குறிப்பிட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இரண்டாவது தடவையாகவும் இனவாதத்தை தோற்கடித்துள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரனின் நிலை கவலைக்குரியது. கடந்த காலங்களில் இவர் நடுநிலையான தன்மையில் செயற்பட்டார் ஆனால் தற்போது தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாத சேற்றுக்குழியில் விழுந்துள்ளார் என்றார்.





