தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை மீள்கட்டமைக்க சீனா நிதியுதவி
மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள 14 பாலங்களை மீள்கட்டமைக்கும் நோக்கில் இக் கருத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
தித்வா புயல் அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ள 14 பாலங்களை மீள்கட்டமைக்கும் கருத்திட்டத்திற்கு சீனா நிதியுதவி வழங்க உடன்பாடு தெரிவித்துள்ளதை அடுத்து, அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் அக் கருத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள 14 பாலங்களை மீள்கட்டமைக்கும் நோக்கில் இக் கருத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் இரண்டு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, முதலாம் கட்டத்தின் கீழ் 18 மாத காலப்பகுதிக்குள் 09 பாலங்களை மீள்கட்டமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக் முதற்கட்ட மீள்கட்டமைப்புப் பணிகளுக்காக சீனக் குடியரசினால் 79 மில்லியன் ரென்மின்பி நிதியுதவியாக வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, இக்கருத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் சீனக் குடியரசுக்கும் இடையில் கையொப்பமிடுவதற்கும், இக் திட்டத்தை இலங்கை அரசாங்கத்தின் திட்டவட்டமான கருத்திட்டமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





