இந்திய வீட்டுத்திட்டம் 2026 - தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் உள்ளடக்கம்
பெருந்தோட்டப்பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
பெருந்தோட்டப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய வீட்டுத்திட்டத்துக்காக இந்தியா 10 இலட்சம் ரூபாவை வழங்கும் அதேவேளை, அரசாங்கம் 2 இலட்சம் ரூபாவை வழங்குகிறது. 2026 - தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்திய வீட்டுத்திட்டமும் உள்ளடக்கப்படுவதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் அர்விந்த சிறிநாத தெரிவித்தார்.
'2026 - தேசிய வீடமைப்பு திட்டம்' தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தனக்கான இடம் - அழகான வாழ்க்கை'
4 பிரதான காரணிகளின் அடிப்படையிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவற்றில் முதலிரு தொகுதிகளின் கீழ் நிவாரணம் மற்றும் கடன் திட்டம் என்பவற்றின் கீழ் முன்னெடுக்கப்படுபவையாகும். நிவாரண திட்டத்தின் கீழ் 'தனக்கான இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளில் 9700 வீடுகள் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்படவுள்ளன. இவை தவிர இதே நிவாரண திட்டத்தின் கீழ் செவண நிதியத்தின் ஊடாக 216 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. முதன் முறையாக செவண நிதியத்தின் ஊடாக அடுக்கு மாடி குடியிருப்பாக மேலும் 80 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இரு வீட்டுக் கடன் திட்டங்கள்
இவற்றுக்கு மேலதிகமாக இரு வீட்டுக் கடன் திட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று சேவாபிமானி கடன் திட்டமாகும். இது அரச உத்தியோகத்தர்களுக்கான கடன் திட்டமாகும். இதன் ஊடாக 10 000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 'தனக்கான இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழான கடன் திட்டத்தின் ஊடாக 2500 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர 2015 - 2019 ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படாமலுள்ள 582 வீடுகளை முழுமையாக நிர்மாணப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய நிதியுதவியில் பெருந்தோட்டங்களில் வீட்டுத்திட்டம்
அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் முன்னெடுக்கப்படும் இந்த திட்டங்களுக்கு அப்பால் பெருந்தோட்டப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்திய வீட்டுத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தையும் உள்ளடக்கி இவ்வாண்டுக்குள் 16 025 வீடுகளை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை தேசிய வீடமைப்பு அதிகாரசபை முன்னெடுத்து வருகிறது.
பெருந்தோட்டப்பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 இலட்சம் ரூபா வழங்கப்படும். தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் 2 இலட்சம் ரூபா வழங்கப்படும். இதற்கு முன்னர் ஒரு இலட்சம் ரூபாவாகக் காணப்பட்ட தொகை தற்போது 2 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர 'கிராம சக்தி' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இந்தியாவின் நிதி உதவியுடன் பிரிதொரு வீடமைப்பு திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது என்றார்.





