கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது: அமைச்சர் விஜித ஹேரத்
இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் தேர்தல் மேடைகளில் இதே போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த அறிக்கைகள் எதுவும் எந்த மாற்றத்திற்கும் இட்டுச் செல்லவில்லை.

கச்சத்தீவினை மீளப் பெறுவது குறித்து இந்தியாவின் மத்திய அரசிடமிருந்தோ அல்லது இராஜதந்திர வழிகளிலோ எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அது இலங்கைக்கு சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தென்னிந்திய திரைப்பட நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் இடம்பெற்ற அரசியல் பேரணியொன்றில் கச்சத்தீவு குறித்து கருத்து தெரிவித்ததை அடுத்து, இந்த விடயம் பரவலான பேசுபொருளாக மாறியிருந்தது. இந்நிலையிலேயே 27-08-2025 அன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், இத்தகைய கருத்துக்கள் வெறும் அரசியலுக்காக வழங்கப்படும் வாக்குறுதிகளாகும். அவற்றுக்கு உத்தியோகபூர்வமான எந்த முக்கியத்துவமும் இல்லை எனத் தெரிவித்தார்.
'கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. இது இலங்கையிலுள்ள ஒரு தீவாகும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. தற்போது தென் இந்தியாவில் தேர்தல் காலமாகும். எனவே வேட்பாளர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் தேர்தல் மேடைகளில் இதே போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த அறிக்கைகள் எதுவும் எந்த மாற்றத்திற்கும் இட்டுச் செல்லவில்லை. விஜய் தனது கருத்தை ஒரு பிரசாரப் பேரணியின் போது வெளியிட்டார், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மத்திய அரசிடமிருந்தோ அல்லது இராஜதந்திர வழிகளிலோ எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. நேற்று, இன்று, மற்றும் நாளை, கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும்,' என அமைச்சர் ஹேரத் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என வினவியபோது, குறித்த ஒப்பந்தங்கள் தற்போது நீதித்துறை மதிப்பாய்வில் உள்ளதாகக் குறிப்பிட்டார். 'அந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக ஒரு நீதிமன்ற வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே சட்ட செயல்முறை முடிவடையும் வரை காத்திருப்போம்,' என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.