ஜே.வி.பி. அரசு பிற்போக்குத்தனமாக உள்ளது: தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டு
பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் முடக்கப்பட்டு 68ஆண்டுகள், ஜூலை கலவரம் நிகழ்ந்து 42 ஆண்டுகளாகின்றன, மாகாண சபைகளுக்கு முதன்முதலாக தேர்தல் நடைபெற்று பிறகு 35 ஆண்டுகளாகின்றன.
இந்திய எதிர்ப்புவாதத்துக்கு முன்னதாக ஜே.வி.பி. தமிழ் மக்களின் சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நிராகரித்துள்ளதோடு அதனை தொடர்ச்சியாகவும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பட்ட இராஜதந்திரியான கலாநிதி. தயான் ஜயத்திலக்க கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதன்பின்னர் 1983ஜுலைக்குப் பின்னர் தெற்கு நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஒன்றோடொன்று இணைந்த ஆனால் வேறுபடுத்தக்கூடிய இரண்டு அரசியல் நிகழ்வுகள் இருந்தன. ஆதிலொன்று தமிழ் கேள்விக்கான அரசியல் தீர்வுக்கான கவன மாற்றம் இரண்டாவது இந்தியாவின் வளர்ந்து வரும் வகிபாகமாகும்.
கறுப்பு ஜுலை தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு தேவை என்பதை வெளிப்படுத்தியது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கில் அரை தன்னாட்சி அதிகார சுய-நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டதாக 1957இல் பண்டாரநாயக்க மற்றும் செல்வநாயகம் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
1983நிகழ்வுகளுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஜே.வி.பி. எந்தப் பக்கத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர 1983 மற்றும் 1984 இல் தனது தலைமறைவுக் காலத்தில் கட்சியின் மத்திய குழுவில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார், அது 1985 இல் 'தமிழீழப் போராட்டத்திற்கு என்ன தீர்வு?' என்ற தலைப்பில் 350பக்கங்களைக் கொண்ட புத்தகமாக இரகசியமாக வெளியிடப்பட்டது.
அதில் அவர் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான கேள்விக்கு ஒரு தீர்வாக எந்தவொரு சுயாட்சி முறைமையையோ அல்லது அதிகாரப்பகிர்வையோ ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அவ்விதமான கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்து எதிர்த்திருந்தார். அவரது வெளிப்படையான நிராகரிப்பில் அவரது கட்சி 1981இல் போட்டியிட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகளைக்கூட உள்ளடக்கப்பட்டிருந்தது.
ஜே.வி.பி.யின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான நிலைப்பாடு இந்திய இராணுவத் தலையீட்டிற்கு எதிர்வினையாக ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு முன்னரேயே இருந்தது. ஜுலை கலவரத்துக்குப் பின்னர் ஜி பார்த்தசாரதி தலைமையிலான தூதுக்குழு விஜயத்துடன் இந்திய இராஜதந்திர வகிபாகம் ஆரம்பித்திருந்தாலும் ஜே.வி.பி. அதற்கு முன்னராகவே தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் இந்திய தலையீட்டையும் ஜே.வி.பி எதிர்த்தது.
ஜே.வி.பி.இடதுசாரித்து சிந்தனைகளைக் கொண்டது என்ற அடிப்படையில் சமஷ்டியை ஏற்காது விட்டாலும் சீன மற்றும் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வெளிப்படையான ஒற்றையாட்சி அரசின் கீழ் இன-பிராந்திய சுயாட்சியை ஏற்றிருந்தன. ஆனால் ஜே.வி.பி.அதற்கு கூட தயாரக இல்லை.
இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக, தமிழ்த் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக விஜேவீர 1985இல் வெளியிட்ட புத்தகத்தில் வெளிப்படுத்தி நிலைப்பாடுகளில் இருந்து தற்போது வரையில் அக்கட்சி மாறவில்லை.
அக்கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வாகவோ அல்லது தற்காலிகமான தீர்வாகவோ அல்லது பகுதியளவிலான தீர்வாகவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்-பிராந்திய சுயாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய பிரச்சினையை ஒரு தனித்துவமான அரசியல் கோரிக்கையாகக்கூட அங்கீகரிக்கவில்லை.
லெனினின் கோட்பாட்டில் பார்க்கின்றபோது ஜே.வி.பியானது 'சொல்லில் சோசலிசத்தைக் கொண்டிருந்தாலும் செயலில் பெருமிதத்தையே (இனவாதத்தையே) கொண்டிருக்கின்றது என்ற வரையறைக்குள்யே காணப்படுகின்றது.
விசேடமாக அரைச்சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களைக் கூட அங்கீகரிப்பதற்கு முன்வராது விட்டாலும் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்தினைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் முடக்கப்பட்டு 68ஆண்டுகள், ஜூலை கலவரம் நிகழ்ந்து 42 ஆண்டுகளாகின்றன, மாகாண சபைகளுக்கு முதன்முதலாக தேர்தல் நடைபெற்று பிறகு 35 ஆண்டுகளாகின்றன.வடக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவiடைந்து 12ஆண்டுகளாகின்றன. ஆனால் தற்போதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து மௌனமாக உள்ளார்.
தமிழ் தேசியப் பிரச்சினை குறித்த அரசியல் உரையாடல், தற்போது 1957க்கு முந்தைய காலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசியல் வெற்றிடம், தமிழ் புலம்பெயர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க புதிய 'இனப்படுகொலைக்கு நீதி கோரும் தலைமுறைக்கு' எதிராக அநுர அரசை அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் பாதுகாப்பற்றதாக விட்டுவிடும்.
அரசுக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகள் மற்றும் முதலமைச்சர்களைக் கொண்டுள்ளோம் என்று பகிரங்கமாக கூறுவதற்கு முடியாது விட்டால் தெற்கில் சிங்கள பெரும்பான்மை 'இனப்படுகொலை'என்ற விடயத்தினைப் பயன்படுத்தி அதிதீவிர தேசியவாதத்துடன் பதிலளிக்கும் நிலைமையே உருவாகும். இது இனங்களுக்கு இடையிலான துருவமயமாக்கலை மேலும் அதிகரிக்கும். இந்த விடயம் சம்பந்தமாக ஜே.வி.பிக்கு கவலைகள் காணப்படவில்லை என்பது வெளிப்படையான விடயமாகும்.
ஜே.ஆர்.ஜயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய ஜனாதிபதிகளின் கீழாக மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. உலகளாவிய இடதுசாரி-தாராளவாதிகளின் வெறுப்பின் சின்னமாக இருந்த மஹிந்த கூட தனது முதல் மற்றும் இரண்டாவது பதவிக்காலங்களில் இரண்டு தடவைகள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் போலியான முற்போக்கு நிர்வாகம், மற்றும் அதனை ஆதரிக்கும் பிரதான ஜனநாயகக் கட்சிகளும் தலைவர்களும் 1980களில் நிகழ்ந்தேறிய துன்பத்தின் முக்கிய முற்போக்கான கட்டமைப்பு விளைவான தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளை, மௌனமான புறக்கணிப்பால் அகற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை, அவர்கள் திரண்ட மக்களாக வாழும் அருகருகே உள்ள பகுதிகளை இணைக்க முடியாதவாறு ஜே.வி.பி பறித்துவிட்டது. அத்தகைய ஜே.வி.பியினர் தற்போது என்.பி.பிஆக இருந்தாலும் மகாhண சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் எதிர்-சீர்திருத்தவாதிகளாகவே காண்பிப்பதோடு, ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை விட மிகவும் பிற்போக்குத்தனமானவர்களதக உள்ளது என்றார்.





