இலங்கை படையை ஹெய்ட்டிக்கு அனுப்புவது பேராபத்தானது - யஸ்மின் சூக்கா
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தரவுகளின்படி இப்படையணியில் 900 இராணுவத்தினரும், 189 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹெய்ட்டி ஆயுதக்குழுக்களில் அங்கம் வகிப்போரில் பெருமளவானோர் சிறுவர்கள் என்பதால், சிறுவர் துஷ்பிரயோக வரலாற்றைக்கொண்ட இலங்கைப் படையினரை அங்கு அனுப்புவது ஹெய்ட்டி சிறுவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இப்படையினர் தொடர்பான சுயாதீன மனித உரிமை மீளாய்வை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தாமையானது அதன் இரட்டை நிலைப்பாட்டைக் காண்பிப்பதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும் சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசனுடன் இணைந்து சர்வதேச இணைய ஊடகமொன்றில் பிரசுரித்திருக்கும் கட்டுரையிலேயே யஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அக்கட்டுரையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஹெய்ட்டியில் பணியிலுள்ள குண்டர் ஒழிப்புப்படைக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அந்த ஆணையைப் புதுப்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை விரைவில் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது. இந்தப் படையணியில் இலங்கையின் பங்களிப்பு மிகமுக்கியமானதாகும். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தரவுகளின்படி இப்படையணியில் 900 இராணுவத்தினரும், 189 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரின் மிகமோசமான கடந்தகால வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்கையில், இந்தப் பங்களிப்பு தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது. 2005 - 2007 வரையான காலப்பகுதியில் ஹெய்ட்டியைச் சேர்ந்த 8 வயது வரையிலான சிறுமிகளை சுமார் 134 க்கும் மேற்பட்ட இலங்கைப் படையினர் முறையற்ற விதத்தில் நடத்தியதாகவும், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மேற்கொண்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய விசாரணையில் கண்டறியப்பட்டது. இருப்பினும் இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்னாளில் பதவியுயர்வு பெற்றனர்.
மனித உரிமைகள் விடயதானக் கொள்கையின் பிரகாரம் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமல் தடுப்பதும், பாதுகாப்பதும் ஐக்கிய நாடுகள் சபையின் கடமையாகும். ஆனால் இலங்கைப் படை வீரர்களின் செயற்பாடுகள் மற்றும் பின்னணியை மீளாய்வு செய்யும் செயன்முறை முற்றாகச் சீர்குலைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அரசியல் அழுத்தங்களால் அமைதிப்படை வீரர்கள் தொடர்பான மீளாய்வுப் பணியிலிருந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விலகியது. அதன் பின்னர் இச்செயன்முறைக்கென நம்பகத்தன்மை வாய்ந்த மாற்றுப்பொறிமுறைகள் எவையும் உருவாக்கப்படவில்லை. மாறாக 2005 - 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கட்டளையிடும் பொறுப்பில் இருந்த அதிகாரிகளே தற்போது மீளாய்வு செயன்முறையில் பங்கேற்பது கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.
இவ்விடயத்தில் பங்களாதேஷுக்கு சுயாதீன மனித உரிமை மீளாய்வு செயன்முறையைக் கட்டாயமாக்கிய ஐக்கிய நாடுகள் சபை, இலங்கைக்கு அதனை வலியுறுத்ததாது ஐ.நாவின் இரட்டை நிலைப்பாட்டையே காண்பிக்கிறது. தற்போது ஹெய்ட்டி ஆயுதக்குழுக்களில் அங்கம் வகிப்போரில் பெருமளவானோர் சிறுவர்கள் என்பதால், சிறுவர் துஷ்பிரயோக வரலாற்றைக்கொண்ட இலங்கையின் படையினரை அங்கு அனுப்புவது ஹெய்ட்டி சிறுவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.





