அமெரிக்கா இலங்கையுடன் அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கிறது: தூதுவர் ஜூலி சங்
மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு உதவி செய்வதில் உறுதியாக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
தித்வா புயலால் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த சவாலான நேரத்தில் அமெரிக்கா இலங்கையுடன் அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கிறது. மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு உதவி செய்வதில் உறுதியாக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானப்படையின் இரு விமானங்கள் 07-12-2025 அன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமெரிக்க தூதுவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அனர்த்த பதிலளிப்பு பணியில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் வீரதீரமான பணியினை மேற்கொள்கிறார்கள். சில கடுமையான பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க படை இங்கே வந்துள்ளது. அமெரிக்க வான் போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் பலத்தினைப் பயன்படுத்தி, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதன் மூலம், முன்னணியில் பணிபுரியும் அணிகள் போக்குவரத்தின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்கள் மீது கவனம் செலுத்துவதற்கு உதவி செய்ய முடியும். இந்த சவாலான நேரத்தில் அமெரிக்கா இலங்கையுடன் அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கிறது. மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு உதவி செய்வதில் உறுதியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியும், பாதுகாப்பு இராஜதந்திர அதிகாரியுமான மெத்திவ் ஹவ்ஸ் கருத்து தெரிவிக்கையில், வீதிகள் சேதமடைந்து வீதிப் போக்குவரத்து தடைப்பட்டும், நேரம் குறைவாகவும் இருக்கும்போது, போக்குவரத்து ஏற்பாட்டியல் வசதிகள் உயிர்நாடியாகின்றன. மிகமுக்கியமான உதவிகளின் உயிர்நாடியை தொடர்ந்தும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக வான் போக்குவரத்துத் திறன் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் அமெரிக்கா இங்கே வருகை தந்துள்ளது.
தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள விமானங்கள் கடினமாகப் பணியாற்றும் நம்பகமான ஒரு விமானமாகும். அது போக்குவரத்து வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் அத்தியாவசியமான சரக்குகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் நகர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இலங்கை ஆயுதப் படைகளுடன் நாம் மேற்கொள்ளும் எமது வழமையான கூட்டுப்பயிற்சிகள் வலுவான உறவுகளை உருவாக்கி, தித்வா சூறாவளி போன்ற நெருக்கடிகளின்போது ஒன்றிணைந்து பணியாற்றும் எமது திறனை மேம்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.





