பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இடைநடுவே நிறுத்தப்படாது: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் திட்டவட்டம்
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை இடைநடுவில் விட்டுவிட்டு நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விடுத்திருந்த கோரிக்கையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நிராகரித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் , பயிற்றுநர்கள், அணி உதவியாளர்கள் ஆகியோருக்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் அந்நாட்டு அரசாங்கமும் உறுதியளித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணம் எக்காரணம் கொண்டு இடைநடுவே நிறுத்தப்படாது. ஆகவே, இந்த சுற்றுப் பயணத்தில் இருந்து விலகி நாடு திரும்புவதற்கு விரும்புவர்கள் மீது முறையான மதிப்பாய்வு செய்து அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படுமென ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை இடைநடுவில் விட்டுவிட்டு நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விடுத்திருந்த கோரிக்கையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நிராகரித்துள்ளது.
அத்துடன், இலங்கை - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்று வரும் சர்வதேச ஒருநாள் தொடரின் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளக்கான போட்டி அட்டவணை திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை,பாகிஸ்தான், ஸிம்பாப்வே அணிகள் பங்கேற்றும் இருபதுக்கு 20 முத்தரப்பு தொடர் ராவல்பிண்டியில் நடத்தவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த குண்டுத் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகரான இஸ்லாமாபாத்துக்கு 17 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ராவல்பிண்டியிலேயே இலங்கை அணியினர் தங்கி இருக்கின்றனர்.
அச்சமடைந்த இலங்கை வீரர்கள்
கடந்த 2009 ஆம் ஆண்டிலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த பஸ் வண்டி மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டு இருந்ததுடன், சில வீரர்கள் சிறிய காயத்துடன் தெய்வாதீனமாக உயிர்த்தப்பி இருந்தனர். இவ்வாறான நிலையில், கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இலங்கை கிரிக்கெட் குழாத்தினரும் அவர்களின் குடும்ப உறவினர்களும் பெரும் அச்சத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து தமது பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு சுற்றுத் தொடரிலிருந்து விலகி உடனடியாக நாடு திரும்புவதற்கான அனுமதியை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியினரின் விடுத்த வேண்டுகோள் குறித்து அவதானம் செலுத்திய ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுடன் புதன்கிழமை இரவு வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை வீரர்களுக்கு உயர் அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் தரப்பு உறுதிபட தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுலாவை இடைநடுவில் விட்டு விட்டு நாடு திரும்ப முடியாது. இலங்கை- பாகிஸ்தான் இருதரப்பு தொடர் மற்றும் ஸிம்பாப்வே, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் குழாத்தில் அங்கம் வகிக்கும் பயிற்றுநர்கள், நிர்வாகத்தினர் என அனைவரும் இந்த சுற்றுத்தொடரில் பங்கேற்க வேண்டும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் கட்டளை பிறப்பித்துள்ளது.
குறித்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை கருத்திற்கொள்ளாமல் இலங்கை வருவதற்கு முடிவெடுக்கும் எந்தவொரு இலங்கை கிரிக்கெட் வீரருக்கும் பதிலாக மாற்று வீரரை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்பட குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவரோ அல்லது பயிற்றுநர் குழு உறுப்பினரோ, நிர்வாகிகளோ யாரேனும் இலங்கைக்கு வருவதற்கு விரும்பினால் அவர்கள் குறித்து முறையான மதிப்பாய்வு செய்து அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.





