வட,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் சுனாமி நினைவேந்தல்
தென் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் சுனாமி அஞ்சலிப் பகுதியில் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
வட,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் சுனாமி நினைவேந்தல்2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரலை அனர்த்தத்தின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் 26-12-2025 அன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு,கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களின் மாவட்ட செயலகங்கள் , பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரதான நினைவாலயங்களில் மிக உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுள் நடைபெற்றதோடு உயிரிழந்த அன்புக்குரியவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்விகளில் பங்கேற்ற தங்கள் அன்புக்குரியவர்களை பறிகொடுத்தவர்கள் கண்ணீர் மல்ல, கதறி அழுது தங்களது ஆற்றாமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றிருந்தது. இதில் நூற்றுக்கான மக்கள் ஒன்றுகூடி அங்குள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கத்தோலிக்க மற்றும் இந்து மத குருமார்களின் தலைமையில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. கடலோரப் பகுதிகளில் 'கடல் அன்னைக்கு' மலர் தூவி பால் ஊற்றி மக்கள் தமது நேர்த்திக்கடன்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டனர்.
கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தால் துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவட்டும் வெளியிடப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ஆழிப்பேரலையில் உயிரிழந்த மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் சூரிய ராஜா தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகி உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளிநொச்சி
தேசிய பாதுகாப்பு தினமும் சுனாமி ஆழிப்பேரலையின் 21ஆவது ஆண்டு நினைவு தினமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் தேசியக்கொடி கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் முல்லை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பட்டன. உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை செலுத்தினர்.
இதேவேளை, கள்ளப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள பாரிய சுனாமி நினைவுத் தூபியில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, உயிரிழந்த நூற்றுக்கணக்கான மக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லில் தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.
அதேநேரம், கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் போது ஆழிப்பேரலையினால் உயிரிழந்த 68 மாணவர்களுக்கு கள்ளப்பாடு பாடசாலையில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ம.சுரேஸ்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேபோன்று மாத்தளன் பகுதியில் மக்கள் ஒன்றுகூடி மக்கள் உயிரிழந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் ஆத்ம சாந்திக்காக தான தர்மங்களை வழங்கினர்.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் அஞ்சலி இடம்பெற்றது.
முதலில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சுனாமியால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தாயாரான மைக்கல் றெசிலின் ராணியால் பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றியதோடு நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மன்னார்
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது. கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மேகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் இணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை சுனாமி பேரலை அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் தேசியக் கொடியேற்றலுடன் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா
பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதன்போது நினைவு கூரப்பட்டது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் சுனாமி பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டதோடு தித்வா புயலினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி சுடரினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஏற்றி வைத்தார்.
இதனை அடுத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நினைவுத்தூபிக்கு மலர் மாலை மற்றும் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 21ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் நடைபெற்றது
இதன்போது உயிரிழந்தவர்களிற்கு காலை 9.25 - 9.27 வரை இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு
2004சுனாமி அனர்த்தம் காரணமாக டச்பாரில் 80பேரும் திருச்செந்தூர் பகுதியில் 243பேரும் புதுமுகத்துவாரம் பகுதியில் 211பேரும் நாவலடி பகுதியில் 544பேரும் உயிரிழந்திருக்கும் நிலையில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக மதவழிபாட்டுகளுடன் முன்னெடுக்கப்பட்டன.
டச்பாரில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு டச்பாரில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது. டச்பாரில் 80பேரின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவுத்தூபியில் கிறிஸ்தவ மத வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மசாந்தி பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
திருச்செந்தூரில் உள்ள நினைவுத்தூபியில் கிறிஸ்தவ மத வழிபாடுகளுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மக்கள் தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
புதுமுகத்துவாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் 211பேரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இந்துசமய வழிபாடுகளுடன் அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன் நாவலடியில் அமைக்கப்பட்டு;ளள 544பேரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் விசேட இந்து மதவழிபாகள் நடைபெற்று இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கடலில் பிண்டம் கரைக்கப்பட்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தப்பட்டதோடு சுனாமி பேபியின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியிலும் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள சுனாமி பேபி அபிலாஷின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியில் முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக அபிலாஷின் பெற்றோர் அஞ்சலி செலுத்தினார். தற்போது 21 வயதுடை 'சுனாமி பேபி' என்று அறியப்படும் ஜெயராசா அபிலாஷ் தனது உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை
அம்பாறை மருதமுனை மற்றும் சாய்ந்தமருது நினைவாலயங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மருதமுனை கடற்கரையில் உள்ள 'சுனாமி மினாரா' நினைவாலயத்தில் மக்கள் திரளாகப் பங்கேற்று அன்புக்குரியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பள்ளிவாசல்களில் விசேட 'துஆ' பிரார்த்தனைகள் இடம்பெற்றன. காரைதீவு மற்றும் பாண்டிருப்பு நினைவாலயங்களில் இந்து மற்றும் கிறிஸ்தவ வழிபாடுகளுடன் ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன அஞ்சலிள் முன்னெடுக்கப்பட்டன.
திருகோணமலை
நிலாவெளி பகுதியில் உள்ள சுனாமி நினைவாலயத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் பங்களிப்புடன் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து திருகோணமலை நகரில் உள்ள பொது நினைவேந்தல் பகுதிகளில் பொதுமக்கள் சுடர் ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மீனவர்கள் தங்களின் படகுகளில் கறுப்புக் கொடிகளை கட்டி துக்கம் அனுஷ்டித்தனர்.
இதேபோன்று தென் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் சுனாமி அஞ்சலிப் பகுதியில் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல பாடசாலைகளில் காலைக்கூட்டத்தின் போது சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





