ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னணியில் இந்தியா : பொலிஸ் தலைமையகம் விளக்கம்
அழைப்பாணையி்ன் பேரில் இம்மாதம் 08-10-2025 அன்று பாராளுமன்ற உயர்மட்டக் குழுவில் முன்னிலையாகியிருந்தேன். இதன்போது அதிகாரிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளித்திருந்தேன்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவினால் பாராளுமன்ற உயர்மட்டக் குழுவிடம் அறிவித்ததாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் பொலிஸ் ஊடகப்பிரிவு 09-10-2025 அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவினால் பாராளுமன்ற உயர் மட்டக் குழுவிடம் அறிவித்துள்ளதாக போலியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன குறிப்பிடுகையில், அழைப்பாணையி்ன் பேரில் இம்மாதம் 08-10-2025 அன்று பாராளுமன்ற உயர்மட்டக் குழுவில் முன்னிலையாகியிருந்தேன். இதன்போது அதிகாரிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளித்திருந்தேன். எவ்வாறெனினும் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஒருபோதும் தெரிவிக்கவில்லை.
தற்போது வெளிவந்துள்ள மேற்படி செய்தி முற்றிலும் நிராகரிக்கிறேன். இது உண்மைக்கு புறம்பான செய்தி என வலியுறுத்தியுள்ளார். இதேவேளை மேற்படி போலியான செய்தியை வெளியிட்ட நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களும் அவரது சட்டத்தரணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.