விஜய்யின் அரசியல், உயிர் தியாகங்களின் மீது வலுவாக கட்டமைக்கப்படட்டும்: சிறீதரன் எம்.பி. இரங்கல்
நெருக்கடியும், கனதியும் மிக்க இந்த துயர்மிகுந்த சூழலால் பாதிப்புற்றிருக்கும் எல்லாத்தரப்பினருடனும் உணர்வுரீதியாக நாமும் கரம்கோர்த்துக்கொள்கிறோம்.

தமிழகத்தின் கரூர் மாவட்டம் - வேலுச்சாமிபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியற்பேரணியில் உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
குறித்த செய்திகள், 'சனத்திரட்சியில் சிக்குண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த மனவேதனைக்குரியது.
எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தால் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த எமது தொப்புள்கொடி உறவுகளான அப்பாவிப் பொதுமக்கள் 39 பேர் அநியாயமாக உயிரிழந்தமை எமக்கும், எமது மக்களுக்கும் மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது.
நெருக்கடியும், கனதியும் மிக்க இந்த துயர்மிகுந்த சூழலால் பாதிப்புற்றிருக்கும் எல்லாத்தரப்பினருடனும் உணர்வுரீதியாக நாமும் கரம்கோர்த்துக்கொள்கிறோம்.
மிகக்குறிப்பாக, புகுமுக அரசியல் கட்சியாக தனது புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினதும், நண்பர் விஜய் அவர்களினதும் அரசியல் பயணம், துயரமும் - கனதியும் மிக்க இந்த உயிர்த்தியாகங்களின் மீது, உறுதி மிக்கதும் மக்கள் மயப்பட்டதுமாக வலுவாக கட்டமைக்கப்படட்டும்.
இழப்பின் வலிகளையும் - ரணங்களையும் உணர்ந்தவர்களாக, ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலிகளும், அவர்களது குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக எமது பிரார்த்தனைகளும்.' என தெரிவித்தார்.