உரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடுவது குறித்து இலங்கை அவதானம் செலுத்த வேண்டும்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகள் மற்றும் 2003, 2006, 2012 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பற்றிய விபரங்களும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மனிதப்புதைகுழிகளில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் உள்ளிட்ட சான்றுகளை உரியவாறு பாதுகாப்பதற்கும், அதுகுறித்து செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அவசியமான போதிய நிதி, நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வலிந்து காணாமலாக்கப்படல்களை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக வகைப்படுத்தியிருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடுவது குறித்து இலங்கை அவதானம் செலுத்தவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 29 ஆவது கூட்டம் ளஎதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின்போது சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தின்கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது பற்றி அக்குழுவினால் மீளாய்வு செய்யப்படும்.
இந்நிலையில் இலங்கை தொடர்பில் அக்குழுவினால் வெளியிடப்படவுள்ள அறிக்கைக்கு சமாந்தரமாக, சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தின்கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளின் அமலாக்கம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 25 பக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், 'நபரொருவரை வலிந்து காணாமலாக்குவது மிகப்பாரிய மனித உரிமை மீறலாகும். இவ்வாறான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இலங்கையின் சகல பாகங்களிலும் இடம்பெற்றிருப்பதுடன் அவற்றின் விளைவாக அனைத்துச் சமூகங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மையையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை அங்கீகரிக்கிறோம். குறிப்பாக பொருளாதார நெருக்கடிகள், ஏனைய பொறுப்புக்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் என்பவற்றுக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த பெண்கள் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன' என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தல், சுதந்திரம் மறுக்கப்படும் இடங்களைக் கண்காணித்தல், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளடங்கலாக ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணல், கொள்கை மறுசீரமைப்பை ஊக்குவித்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய விடயங்களில் கடந்த காலங்களிலும், அண்மைய நாட்களிலும் தம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவ்வறிக்கையில் விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகள் மற்றும் 2003, 2006, 2012 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பற்றிய விபரங்களும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்தோடு கடந்த ஆண்டு கோனபினுவல கபில குமார டி சில்வா வலிந்து காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பற்றிய உண்மைத்தகவல்கள் மற்றும் அவ்விவகாரத்தில் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் என்பனவும் மேற்படி அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருப்பதுடன் அரச அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் என்பன உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் முகங்கொடுத்துவரும் சவால்கள் தொடர்பிலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
'கடந்தகால விசாரணை ஆணைக்குழுக்களில் சுமார் 27,000 க்கும் மேற்பட்ட வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு 21,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுமாத்திரமன்றி 2009 மேமாதம் 17 ஆம், 18 ஆம் திகதிகளில் பாதுகாப்புப்படையினரிடம் சரணடைந்த சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருப்பதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது' என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான 11 பரிந்துரைகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் முன்வைத்துள்ளது.
கோனபினுவல கபில குமார டி சில்வா வலிந்து காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்படல் சட்டத்தின்கீழ் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்தல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்குமான பரந்துபட்ட அதிகாரங்களைக்கொண்ட புதிய நிரந்தர கட்டமைப்பொன்றை ஸ்தாபித்தல், 'பரந்துபட்ட மற்றும் திட்டமிட்ட வலிந்து காணாமலாக்கப்படலை' வலிந்து காணாமலாக்கப்படல் சட்டத்தின்கீழ் குறித்துரைக்கப்பட்ட குற்றமாக உள்ளடக்கல், வலிந்து காணாமலாக்கப்படலால் பாதிக்கப்பட்ட நபருக்கு சர்வதேச நியமங்களின் பிரகாரம் வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுக் கொடுப்பனவை நிர்ணயம் செய்தல், மனிதப்புதைகுழிகளில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் உள்ளிட்ட சான்றுகளை உரியவாறு பாதுகாப்பதற்கும், செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஏதுவானவகையில் போதிய நிதி, நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்கல், வலிந்து காணாமலாக்கப்படல் சட்டம் மற்றும் பிரகடனத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினருக்கு உரியவாறு தெளிவூட்டல், பரந்துபட்ட மற்றும் திட்டமிட்ட வலிந்து காணாமலாக்கப்படல்களை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக வகைப்படுத்தியிருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடுவது குறித்து அவதானம் செலுத்தல் என்பனவே அப்பரிந்துரைகளாகும்.