கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த ராமேஸ்வர மீனவர்கள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் விசைப்படகுகளில் மீனவர்கள் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தையும், கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மூன்று பேருக்கு நேற்று முன்தினம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
“எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறும் கச்ச்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணிப்பதாகவும், விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மூன்று நாட்கள் நடந்தே சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது படகு உரிமம், மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைப்பதுடன், மீன்பிடி விசைப்படகுகளில் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்” என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் - ராமேஸ்வரம் மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டதாக தெரிவித்து 23 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் இரு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தனர்.
விசாரணைகளுக்கு பின்னர் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். குறித்த மீனவர்களின் வழக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டதுடன், இரு மீன்பிடி விசைப்படகின் ஓட்டுநர்களான பெக்கர் மற்றும் ராபர்ட் ஆகிய இருவருக்கும் ஆறு மாத காலம் சிறந்த தண்டனையும், வழங்கப்பட்டது.
மேலும் இலங்கை கடற்படையால் 2019 ஆண்டு கைதுசெய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர் மெல்வின் மீண்டும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்பளிக்கப்பட்டது.
இலங்கை நீதிமன்ற இந்த தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறித்த தீர்ப்பை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட், பெக்கர், மெல்வின் ஆகிய மூன்று மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இன்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் இடம்பெற்றிருந்தது.