படகில் கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ தங்கம் கடற்படையினரால் பறிமுதல்
மோசடி சம்பவம் தொடர்பில் 3 சந்தேக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பத்தலன் குந்துவ கடற்பரப்பில் கடற்படையினரால் சனிக்கிழமை (4) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக 11 கிலோ 300 கிராம் தங்கத்தை கடத்திய 3 சந்தேக குற்றவாளிகளுடன் படகு ஒன்று இடைமறிக்கப்பட்டது.
தங்க கடத்தல் மோசடி தொடர்பில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பேரில் சிறிலங்கா கடற்படை கப்பல் விஜயாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு படகு படைப்பிரிவு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
பத்தலன் குண்டுவ தீவில் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படையினர் இடைமறித்ததுடன், படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 11 கிலோ 300 கிராம் தங்கத்தை மீட்டனர்.
இதன்போது கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மோசடி சம்பவம் தொடர்பில் 3 சந்தேக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக குற்றவாளிகள் மற்றும் தங்கம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.