ஓய்வுபெற்ற முன்னாள் படை வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக விசேட அரசாங்க நிகழ்ச்சி திட்டங்கள் ஜனாதிபதியால் அறிவிப்பு
பாதுகாப்புச் சட்டத்தில் விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல், தேசிய பாதுகாப்புச் சபையை சட்டபூர்வமாக்குதல் மற்றும் ஆயுதப் படைகள் குழுவை நிறுவுதல் ஆகியவற்றுக்கான திட்டங்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.

ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நிகழ்ச்சி திட்டமொன்றின் இன்மையினால் சில முன்னாள் படைவீரர்கள் கடினமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதனடிப்படையில் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை ஆகியவற்றுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பத்தரமுல்லை, அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சு அவென்யூவில் அமைந்துள்ள 'முன்னாள் படைவீரர்களின் இல்லம்' என அழைக்கப்படும் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைமையக கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை வலியுறுத்திய ஜனாதிபதி, 'உருமய' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் போர் வீரர்களின் கிராமங்களில் வாழ்பவர்களுக்கு இலவசக் காணி உரிமைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்புச் சட்டத்தில் விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல், தேசிய பாதுகாப்புச் சபையை சட்டபூர்வமாக்குதல் மற்றும் ஆயுதப் படைகள் குழுவை நிறுவுதல் ஆகியவற்றுக்கான திட்டங்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.
சிறிலங்கா மூலோபாய கற்கைகளுக்கான நிறுவனத்தை நிறுவுவதாக அவர் அறிவித்தார். இது செயலில் உள்ள சேவை உறுப்பினர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போர்த் தந்திரோபாயங்களை கற்பதற்கான வாய்ப்புகளை வழங்கும்.
சிறிலங்கா முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைமையக கட்டடத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து மருத்துவமனையைப் பார்வையிட்டார்.