யுக்ரெய்ன் மீதான யுத்தத்துக்கு ஆதரவளித்த 2 ரஷ்யர்களுக்கு உலக டய்க்வொண்டோவில் பங்குபற்ற தடை

அஸர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெறவுள்ள உலக டய்க்வொண்டோ சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்ற இரண்டு ரஷ்ய ஒலிம்பிக் சம்பியன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யுக்ரெய்ன் மீதான யுத்தத்துக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக உலக டய்க்வொண்டோ (World Taekwondo) அறிவித்துள்ளது.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 80 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மெக்சிம் க்ராம்சோவ், 80 கிலோ கிராம் எடைக்கு மேற்பட்ட பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற விலடிஸ்லாவ் லெரின் ஆகிய இருவரையும் தமது அணியில் ரஷ்ய டய்க்வொண்டோ பேரவை இணைத்திருந்தது.
ஜப்பானில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி சார்பாக பங்குபற்றிய அவர்கள் இருவரும் ஒலிம்பிக் டய்க்வொண்டோவில் சம்பியனான முதலாவது ரஷ்யர்கள் என்ற பெருமையை பெற்றனர். ஆனால், அதன் பின்னர் விளாடிமிர் புட்டினின் யுக்ரெய்ன் மீதான ஆக்கிரமிப்புக்கு அவர்கள் இருவரும் தமது ஆதரவை வெளியிட்டு வந்தனர்.
நடுநிலையான போட்டியாளர்களாக பங்குபற்ற சமர்ப்பிக்கப்பட்ட அவர்கள் இருவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை உலக டய்க்வொண்டோ உறுதிசெய்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் மீதான தடையை முழுமையாக நீக்கிய உலக விளையாட்டுத்துறை அமைப்புகளில் உலக டய்க்வொண்டோவும் ஒன்றாகும். எனினும், மோதலை ஆதரிப்பவர்கள் அல்லது இராணுவத்துடன் தொடர்புபட்டவர்களை தடுக்கும் விதிகளுக்கு கட்டுப்பட உலக டய்க்வொண்டோ இணங்கியிருந்தது.
உலக சம்பியன்ஷிப்பில் பங்குபற்றுவதற்கு மூன்று படிமுறைகள் அவசியப்படுகிறது. அங்கத்துவ தேசிய சங்கம் மற்றும் கண்டங்களுக்கான பேரவை ஆகியவற்றின் சரிபார்ப்பு, போட்டியாளர் அல்லது ஆதரவுப் பணியாளர்களால் தனிநபர் தலைமையிலான உறுதிப்படுத்தல் மற்றும் ஆய்வுக்கான இறுதி மதிப்பாய்வு ஆகியனவே அந்த மூன்று படிமுறைகளாகும்.
உலக டய்க்வொண்டோ சம்பியன்ஷிப்புக்கு சமர்ப்பிக்கப்பட்ட ரஷ்ய கடவுச் சீட்டுடைய 14 விண்ணப்பங்களும் பெலாரஸ் கடவுச்சீட்டுடைய 9 விண்ணப்பங்களும் தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாகுவில் பங்கேற்பதற்கான நிபந்தனைகளை முற்றுமுழுதாக மதிக்கும் உறுதிமொழியில் இந்த வீரர்கள் அனைவரும் கைச்சாத்திட வேண்டும்.
க்ராம்சோவ் மற்றும் லெரின் ஆகியோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை ரஷ்ய டய்க்வொண்டோ பேரவை கண்டித்துள்ளது.