ஜெலன்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்-சிறுமி உட்பட 6 பேர் பலி

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் மீது ரஷ்யா இரண்டு ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் 10 வயதான சிறுமி உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
இந்த தாக்குதல்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும், நான்கு மாடி பல்கலைக்கழக கட்டிடமும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
தாக்குதலில் 10 வயதான சிறுமி மற்றும் அவரது தாய் உட்பட 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 64 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைனின் Dnepro பிராந்திய ஆளுநர் Serhiy Lisak தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதுடன் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் உக்ரைன் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏவுகணை தாக்குதல் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இதனிடையே ரஷ்யா சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை எவரும் பொறுப்பேற்கவில்லை.
அதேவேளை ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோவில் ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன், திங்கள்கிழமை ரஷ்யாவின் பிரையன்ஸ்க் மீது ட்ரோன் விமான தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தவிர உக்ரைனின் கார்கிவ், கெர்சன் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய இடங்களில் ரஷ்ய நடத்திய பீரங்கித் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.