தேசிய மக்கள் சக்தியின் வெற்றியும் இனவாதம் பற்றிய சிங்கள அரசியல் சமூகத்தின் பார்வையும்

இந்த வெற்றியை ஜே.வி.பி எவ்வாறு வியாக்கியானப்படுத்துகிறது? அது மட்டுமன்றி ஒட்டுமொத்த சிங்கள கட்சிகளும் எவ்வாறு வியாக்கியானப்படுத்துகின்றன? இதன் கள்ளத்தனமான அர்த்தம் என்ன? இதன் விளைவுகள் எவையாக இருக்கும்? என்பதனை தமிழ் தலைமைகளும் மக்களும் ஆழமாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஜே.வி.பி உட்பட எந்த ஓர் சிங்கள கட்சியோ தலைவர்களோ சிங்கள இன மேலாதிக்க வாதம் பற்றியோ பௌத்த மத மேலாதிக்கவாதம் பற்றியோ இதுவரை ஒரு தடவையேனும் நாடாளுமன்றத்திலோ வெளியிலோ பேசியதில்லை. அதன் அமைச்சர்களும் அடிக்கொரு தடவை நாம் இனவாதத்திற்கு எதிரானவர்கள் எனக் கூறி வருகின்றனர். ஆனால் இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் தான் ஆட்சி புரிகிறது என்பதனை வெளிப்படையாக விமர்சிக்கவோ கண்டிக்கவோ தயாராக இல்லை. ஏனெனில் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்கின்ற பொய்யான கருத்துக்கள் அவர்களது மதம், கல்வி மற்றும் அரசியல் சமூக கருத்துக்கள், செயற்பாடுகள் ஊடாக தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே குழந்தை பருவத்திலிருந்து பொய்யால் ஊட்டி வளர்க்கப்பட்டதனால் இலங்கை சிங்கள - பௌத்த நாடு எனவும் அவர்களுக்கே சொந்தம் எனவும் சிங்களவரின் தயவில் இரண்டாம் தர பிரஜைகள் என்பதை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டியவர்களே தமிழர்கள். அவர்கள் தமது உரிமையை கேட்பது சிங்களவரின் உரிமையை பறிப்பதாக எனவும் வியாக்கியானப்படுத்தும் நிலையிலேயே ஒட்டுமொத்த சிங்கள அரசியல்வாதிகளும் உள்ளனர். இலங்கையின் தொன்மையான நாகரீகம் சைவத்தமிழ் நாகரிகம் என்பதை ஏற்றுக்கொள்ள அல்லது ஜீரணிக்க மறுப்பதுடன் சிங்கள - பௌத்த இன -மத மேலாதிக்கத்தை வரலாற்று பூர்வமானது, அறிவுபூர்வமானது, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்பதை அதிகாரத்தை பயன்படுத்தி நிலைநாட்ட முற்படுகின்றனர். இலங்கை தமிழ் மக்கள் அவர்களின் போராட்ட கோரிக்கைகள், சுலோகங்கள், கருத்துக்கள் எவையும் சிங்களவர்களின் உரிமையை மறுத்ததில்லை. மாறாக தமது உரிமைகளை நிலைநாட்டும் அர்த்தம் கொண்டவையே. ஆனால் தமிழ் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்ட முயற்சிப்பது இனவாதமாக பிரிவினைவாதமாக சித்தரிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்படுகிறது. இலங்கையில் தமிழ் இனவாதம் என்ற ஒன்றில்லை. மாறாக தமிழ் மக்களின் மாறாக தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலித்து அவர்களின் உரிமைகள், வாழ்வியல் நலன்கள் மீது தமது விருப்பமான, வசதியான வாழ்க்கையை கட்டி எழுப்பும் சிங்கள - பௌத்த மேலாதிக்கவாத சட்டங்கள் நடைமுறைகளுக்கு எதிராகவே போராடுகின்றனர் என்ற அடிப்படை யதார்த்தத்தை இனவாதத்திற்கு எதிரானவர்களாக தம்மை முன்னிலைப்படுத்த முயலும் ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கையில் சிங்கள - பௌத்த மேலாதிக்கவாதத்திற்கான வித்துக்கள் அவர்களது முக்கிய நூலான மகாவம்சம் கொண்டுள்ளது. அவற்றை மேலாதிக்கவாத விளக்கம் , வியாக்கியானம் கொடுத்து மக்கள்மயப்படுத்தியவர் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் அநகாரிக தர்மபாலவாகும். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இவரே சிங்களவர்களே மண்ணின் மைந்தர்கள். ஏனையோர் எல்லாம் வந்தேறுகுடிகள் என்ற பொய்யான சிங்கள இன மேலாதிக்க கருத்தை மக்கள் மயப்படுத்தினார். இதனை அடியொற்றியே இலங்கையின் அனைத்து சிங்கள அரசியல் கட்சிகளின் புரிதலும் கொள்கைகளும் செயற்பாடுகளும் அமைந்தன. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கட்சிகள் அனைத்தும் தமிழர்களின் உரிமைகளை பறித்தும் சட்டங்களையும் நடைமுறைகளையும் உருவாக்கி செயல்படுத்தினர். மலையகத் தமிழரின் வாக்குரிமையை டி. எஸ். சேனாநாயக்க பறித்தார். சிங்களம் மட்டுமே அரச மொழி சட்டத்தை கொண்டு வந்தார் பண்டாரநாயக்க. சிறுபான்மை மக்களின் உரிமை பாதுகாப்பு சரத்தை இல்லாதொழித்து தமிழ் மக்களை அரசியல் யாப்பு ரீதியாக இரண்டாம் தர பிரஜையாக்கினார், பௌத்தத்திற்கு அதியுயர் அந்தஸ்தை வழங்கினார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. தமிழரை பட்டினி போட்டால் சிங்களவர் சந்தோஷப்படுவர், தமிழரின் உணர்வு பற்றி எனக்கு அக்கறை இல்லை என்றார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. சிங்களவர்கள் ஆலமரம், தமிழர்கள் குருவிச்சைகள் என்றார் விஜயதுங்க. இந்திய விஸ்தரிப்புக் கொள்கையின் இலங்கை முகவர்களே தமிழர்கள், இவர்கள் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தானவர்கள் என்கிறது ஜே.வி.பி. ஆக சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை உள்ளடக்கமாகக் கொண்டவையே ஜே.வி.பி உள்ளிட்ட அனைத்து சிங்கள கட்சிகளும். சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றனவே தவிர,தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் இலக்கு ஒன்றே. நாம் இனவாதத்திற்கு எதிரானவர்கள் எனக் கூறும் ஜே.வி.பி மேற்கண்ட 70 ஆண்டு கால தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் நடைமுறைகளையும் ஒருபோதும் விமர்சித்ததில்லை, கண்டித்தது இல்லை. அவர்களது நாடாளுமன்ற காலகட்டத்தில் கூட ஒரு தடவையேனும் சிங்கள ஆட்சியாளரின் தமிழருக்கு எதிரான இனவாத சட்டங்கள், செயற்பாடுகளை தட்டி கேட்டதில்லை. மாறாக மேற்கண்ட சட்டங்கள், நடைமுறைகள் அனைத்தையும் கள்ள மௌனத்துடன் அங்கீகரித்தவர்கள். பௌத்தத்திற்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்ட அதிஉயர் அதிகாரத்தை மாற்ற விடமாட்டேன் என்று கூறும் ஜனாதிபதி அனுரவும் அவர் சகாக்களும் தாம் இனவாதிகள் அல்ல, அதற்கு எதிரானவர்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய் இல்லையா? தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவையில்லை என்பது சிங்கள இன மேலாதிக்கவாதம் இல்லையா? ஐநா தீர்மானங்களை ஏற்க மாட்டோம் என்பது சிங்கள இனவாதம் இல்லையா? யுத்த குற்றத்தில் ஈடுபட்ட ராணுவத்தினரை தண்டிக்க மாட்டேன் என கருத்து கூறுவது இனவாதம் இல்லையா?
எனவே தாம் இனவாதத்திற்கு எதிரானவர்கள் எனக் கூறுவது வெற்றுக் கூச்சல் இல்லையா? இந்த ஆழமான உண்மைகளை புரிந்து கொள்ள தவறி நாம் இனவாதத்திற்கு எதிரானவர்கள், ஊழலுக்கு எதிரானவர்கள், நாம் தமிழர் , சிங்களவர் என்ற வேறுபாடு பார்க்கமாட்டோம் என்ற போலி கூற்றை நம்பி ரணில், மகிந்த, சஜித் வகையறாக்கள் போலன்றி இவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை தருவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள் தமிழ் இனவாதத்திற்கு எதிரான வாக்குகள் என்றும் தமது சிங்கள பௌத்த மேலாதிக்க நிகழ்ச்சி நிரலை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றும் ஆளும் ஜே.வி.பி உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளும் சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யும் அவலத்தை தோற்றுவித்துள்ளது. இவர்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் பொல்லு கொடுத்து அடிவாங்கும் நிலையை தோற்றுவித்துள்ளது. இப்போதே விழித்துக் கொண்டால் மட்டுமே தமிழ் தேசிய உரிமைப் போராட்டம் ஓரளவேனும் உயிர்ப்புடன் முன்னகர முடியும். வரப்போகும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் தமிழ் உள்ளூராட்சி சபைகள் எவற்றையேனும் ஜே.வி.பி கைப்பற்றும் நிலை ஏற்படுமாயின் அது தமிழ் தேசிய உரிமைக் குரலுக்கான சாவு மணியாக அமைந்துவிடும் அபாயத்தில் இருப்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் புரிந்து செயல்பட்டாலேயொழிய தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டம் வலுவிழப்பதை தடுக்க முடியாது.