நாணயம் அச்சிட்டு பற்றாக்குறையை முகாமை செய்யபோவதில்லை: அமைச்சர் அனில் பெர்னாண்டோ
நாணய புழக்கம் மற்றும் நிதி ஸ்திரப்படுத்தலை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை மத்திய வங்கிக்கு உண்டு.
நாணயம் அச்சிட்டு வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யபோவதில்லை. நாணயம் அச்சிட்டுள்ளதாக போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.அவ்வாறு நாணயம் அச்சிட்டிருந்தால் பணவீக்கம் சடுதியாக உயர்வடைந்திருக்கும் என தொழில் அமைச்சரும், பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-08-2025 அன்று நடைபெற்ற உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை, நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் எதிர்மறையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இலக்கிடப்பட்ட வருமானம் அடையப்பட்டுள்ளது.
வரி வலையமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய சுங்கத்திணைக்களம் முதன்முறையாக அதிகளவில் வரி வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.இந்த ஆண்டு 2150 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுங்கத்திணைக்களம் 1316 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது.
நிதி பாய்ச்சல் தொடர்பில் போதிய தெளிவில்லாமல் அரசாங்கம் நாணயம் அச்சிட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது நிலைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கையிருப்பையும் காட்டிலும் தற்போது வெளிநாட்டு கையிருப்பு உயர்வடைந்துள்ளது..
நாணய புழக்கம் மற்றும் நிதி ஸ்திரப்படுத்தலை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை மத்திய வங்கிக்கு உண்டு. அரசாங்கம் 1.7 ரில்லியன் ரூபாய் வரையில் நாணயம் அச்சிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு போலியானது.
நாணயம் அச்சிட்டு வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யபோவதில்லை. நாணயம் அச்சிட்டுள்ளதாக போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.அவ்வாறு நாணயம் அச்சிட்டிருந்தால் பணவீக்கம் சடுதியாக உயர்வடைந்திருக்கும் ஆகவே மக்களை தவறாக வழிநடத்துவதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.





