ரஷ்ய பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதியின் சிறைத்தண்டனை காலம் குறைப்பு
பிரதிவாதிகளின் பிள்ளைகள் எதிர்கொண்டுள்ள இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சிறைத்தண்டனையை மறுபரிசீலனை செய்வது பொருத்தமானது எனப் பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
நாட்டினுள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை நாட்டுக்கு வரவழைத்து, பாலியல் தொழில் மற்றும் அது சார்ந்த நடத்தையில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு விதிக்கப்பட்டிருந்த 7 வருட சிறைத்தண்டனையை, அவர்களின் பிள்ளைகளின் நிலையைக் கருத்திற்கொண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் 4 வருடமாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி, பிரதிவாதிகளான கணவனும் மனைவியும் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிபதிகளான பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற இருவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இத்தீர்ப்பை அறிவித்தது.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், குறித்த ரஷ்ய பெண்ணை ஏமாற்றி நாட்டுக்கு வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை மற்றும் அதற்குத் தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த தம்பதி குற்றவாளியாகக் காணப்பட்டனர். இதனையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களுக்கு 3 குற்றச்சாட்டுகளின் கீழ் 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பிரதிவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பிள்ளைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேற்படி வழக்கில் முதலாவது பிரதிவாதியான பெண்ணின் 7 வயது மகள் சிறுவர் இல்லமொன்றில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், முச்சக்கரவண்டி சாரதியான 2 ஆவது பிரதிவாதியான நபரே தொழில் புரிந்து குடும்பத்துக்கான வருமானத்தை ஈட்டித் தந்துள்ளார். இந்நிலையில் 2 ஆவது பிரதிவாதியின் தாயாரும் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அவரது சகோதரியும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் பிரதிவாதி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்திருந்தார்.
பிரதிவாதிகளின் பிள்ளைகள் எதிர்கொண்டுள்ள இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சிறைத்தண்டனையை மறுபரிசீலனை செய்வது பொருத்தமானது எனப் பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதற்கமைய, மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையை 4 வருட கடூழிய சிறைத்தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்திருந்தது. அதேவேளை, மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் இழப்பீட்டுத் தொகைகளில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.





